வட மாவட்டங்களில் சென்னை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களிலும் நேற்று மதியம் மழை பெய்துள்ளது. இந்த மழை 13ம் தேதி வரை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, அதிகபட்ச வெப்பநிலை தமிழகத்தில் இயல்பைவிட 2டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையும் அதிகரித்து காணப்படும் என்றும், தமிழக உள் மாவட்டங்களில் 90 டிகிரி வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் மதியம் மழை பெய்தது.
சென்னை, ஈரோடு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் நேற்று இயல்பைவிட 3 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. கோவை, தர்மபுரி, மதுரை, நாகை, திருப்பத்தூர், திருச்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் இயல்பைவிட 3 டிகிரி அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில், தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்குவங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் இன்றும் தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதன் தொடர்ச்சியாக 17ம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மழை பெய்யும் வாய்ப்புள்ள காரணத்தால், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை குறையவும் வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.
The post தமிழகத்தில் இன்றும் மழை பெய்யும் appeared first on Dinakaran.
