முதல்வர் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுக்கோப்பை: எம்எல்ஏ சுந்தர் பரிசு வழங்கினார்

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி ஊராட்சிகள் தோறும் பொதுக் கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கிரிக்கெட், வாலிபால், கபடி உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குவது என பல்வேறு ஆக்கப்பூர்வமான மக்கள் பணிகளை மாவட்ட, பேரூர், ஒன்றிய, திமுக நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அதன்படி வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்ணவாக்கம் ஊராட்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இதில், சுற்று வட்டார கிராமங்களை சார்ந்த 25 அணிகள் கலந்து கொண்டு ஆடுகளத்தில் இறங்கினர். இதன் இறுதி கட்டமாக நடைபெற்ற போட்டியில் வாலாஜாபாத் பேரூர் வல்லப்பாக்கம் அணி, குண்ணவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஏலக்காய் மங்கலம் அணி ஆகிய இரண்டு அணிகள் விளையாடின. இதில், வாலாஜாபாத் பேரூர் வல்லப்பாக்கம் அணியினர் முதல் பரிசை தட்டிச் சென்றனர். இரண்டாம் பரிசை குண்ணவாக்கம் ஊராட்சிக்குட்பட்ட ஏலக்காய் மங்கலம் அணியினர் தட்டிச் சென்றனர். இவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று முன்தினம் குண்ணவாக்கத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் முதல் பரிசு வென்ற அணியினருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கினார். இரண்டாம் இடத்தைப் பிடித்த அணியினருக்கு ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கினார். மூன்று, நான்காம் இடத்தை பிடித்த அணியினருக்கும் ரொக்க பரிசும் கோப்பைகளும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணைத் தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர் சஞ்ஜய்காந்தி, ஊராட்சி மன்ற தலைவர் புவனேஸ்வரி குப்புசாமி, திமுக ஒன்றிய துணை செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு கிராமங்களை சார்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

The post முதல்வர் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசுக்கோப்பை: எம்எல்ஏ சுந்தர் பரிசு வழங்கினார் appeared first on Dinakaran.

Related Stories: