சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, சென்னை பெருநகர காவல் எல்லையில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல்ேவறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, கால் டாக்சி, மற்றும் செல்போன் செயலிகள் மூலம் இயங்கும் ஊபர், ரேபிடோ, ஓலா போன்ற வாடகை வாகனங்களில் ‘கியூஆர்’கோடு அடிப்படையிலான அவசரகால திட்டத்தை சென்னை பெருநகர காவல்துறை அறிமுகம் செய்துள்ளது.
இந்த திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வகையில், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் இயக்கப்படும் ஆட்டோ, ஷேர் ஆட்டோ, வாடகை வாகனங்கள், ஆன்லைன் மூலம் இயக்கப்படும் வாகனங்கள் என மொத்தம் 88,859 வாகனங்களில் விவரங்களை போக்குவரத்து துறையிடம் இருந்து பெற்று, ஒவ்வொரு வாகனத்திற்கு தனித்தனி கியூ ஆர் கோடு தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாகனத்தில் ஒட்டும் பணி கடந்த 7ம் தேதி முதல் மும்முரமாக நடந்து வருகிறது.
கியூஆர் கோடு திட்டம் குறித்து காவல்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: இத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்த 3 நாட்களில் ஆட்டோ உள்ளிட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடகை வாகனங்களுக்கு ‘கியூஆர்’ கோடு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த பணியை நாங்கள் போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறோம். ஒரு வாரத்தில் சென்னையில் உள்ள அனைத்து வாடகை வாகனங்களிலும் கியூஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்படும். சட்டம் ஒழுங்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து போலீசார் இந்த பணியை செய்து வருகிறார்கள்.
சில வாகனங்களில் கியூஆர் கோடில் வாகன ஒட்டுநர்களின் செல்போன் எண்ணுக்கு பதிலாக உரிமையாளர் செல்போன் எண் உள்ளது. அப்படி மாறியுள்ள வாகனங்களின் ஆவணங்களை ஆய்வு செய்து உரிய நபரின் செல்போன் எண்ணை கியூஆர் கோடில் மீண்டும் பதிவேற்றம் செய்து ஒட்டி வருகிறோம். எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 100 வாகனங்களுக்கு கட்டாயம் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை செய்ய வேண்டும் என உத்தவிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம், குறிப்பாக பெண்களிடம் அதிகளவில் வரவேற்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
* ‘பாதுகாப்பாக உணர்கிறோம்’
இத் திட்டம் குறித்து திருவான்மியூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் ரேவதி என்பவர் கூறுகையில், ‘ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் எங்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் இரவு நேரங்களில் வீடு திரும்ப வாகன ஏற்பாடு செய்து இருந்தாலும், அருகில் உள்ள இடங்களுக்கு செல்ல நாங்கள் அதிகளவில் ஆட்டோ மற்றும் ஊபர், ஓலா போன்ற வாகனங்களைத் தான் அதிகம் பயன்படுத்துகிறோம்.
இந்த கியூஆர் கோடு திட்டத்தால் நாங்கள் தனியாக இல்லாமல், பாதுகாப்புடன் வாகனங்களில் பயணிப்பதாக உணர்கிறோம். இனி நாங்கள் எவரது துணையும் இன்றி சென்னை முழுவதும் வாகனங்களில் தனியாக செல்ல இத் திட்டம் உதவியாக இருக்கும். உலக பெண்கள் தினத்தன்று பெண்களுக்கு பரிசு வழங்குவது போல் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த தமிழக முதல்வருக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவித்தார்.
The post பெண்களின் பாதுகாப்புக்காக முதல்வர் தொடங்கிய திட்டம் ஆட்டோ உள்ளிட்ட 88,859 வாடகை வாகனங்களில் கியூஆர் கோடு ஒட்டும் பணி தீவிரம் appeared first on Dinakaran.
