தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு 50 சதவீத செலவை ஏற்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடக சட்டப் பேரவையில் அம்மாநிலத்தின் 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து பேசிய முதல்வர் சித்தராமய்யா, கர்நாடகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டங்களில் 9 திட்டங்களின் மதிப்பில் 50 சதவீதத்தை கர்நாடக மாநில அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார்.

மேலும், 7 திட்டங்களுக்குத் தேவையான நிலங்களைக் கையகப்படுத்தித் தருவதற்கான செலவு முழுவதையும் தமது அரசு ஏற்றுக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில், 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 9 இரட்டைப் பாதைத் திட்டங்கள், 3 அகலப்பாதைத் திட்டங்கள் என மொத்தம் 22 திட்டங்கள் ரூ.33,467 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களுக்காக கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.7,154 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.

எனினும், புதிய பாதைத் திட்டங்களில் வெறும் 2.75 சதவீத பணிகளும், இரட்டைப் பாதைத் திட்டங்களில் வெறும் 3.82 சதவீத பணிகளும் மட்டும் தான் இதுவரை முடிவடைந்துள்ளன. எனவே, முதன்மையான ரயில்வே திட்டங்களுக்கான செலவில் பாதியை தமிழக அரசு ஏற்றுக்கொள்ள முன்வர வேண்டும். அதன்மூலம் தமிழக ரயில்வே திட்டங்களை விரைவுப்படுத்தி தமிழகத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை விரைவுபடுத்த தமிழ்நாடு அரசு 50 சதவீத செலவை ஏற்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: