* 3 மாவட்டங்களில் துப்பாக்கிக்சூடு, 25 பேர் படுகாயம்
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் பேருந்து சேவை தொடங்கிய நிலையில் பாதுகாப்பு படையினருக்கும், குக்கி போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் பலியானார். 25 பேர் படுகாயமடைந்தனர். வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 மே 3ம் தேதி ஏற்பட்ட இனக்கலவரத்தில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மணிப்பூர் இனக்கலவரத்தில் முதல்வர் பிரேன் சிங்குக்கும் தொடர்பு இருப்பதாக ஆடியோ கிளிப்புகள் வௌியான சூழலில் சட்டப்பேரவை கூட்டத்தில் பிரேன் சிங்குக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்தன.
ஆனால் அதற்குள் முதல்வர் பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்து விட்டார். தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் அண்மையில் மணிப்பூர் சென்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மார்ச் 8 முதல்(நேற்று) முதல் மணிப்பூரின் அனைத்து சாலைகளும் திறக்கப்பட்டு, மக்கள் சாலைகளில் சுதந்திரமாக நடமாடுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இதையடுத்து இரண்டாண்டுகளுக்கு பிறகு மணிப்பூரில் நேற்று முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்கியது. அதன்படி இம்பால் விமான நிலையத்தில் இருந்து சூராசந்த்பூர், சேனாபதி மாவட்டங்களுக்கு நேற்று காலை பேருந்துகள் புறப்பட்டு சென்றன. இந்த பேருந்துகளுக்கு ராணுவம், மத்திய பாதுகாப்பு படைகள் பாதுகாப்பாக சென்றன. சூராசந்த்பூர் புறப்பட்ட பேருந்து எந்த இடையூறுகளும் இல்லாமல் சென்றது.
ஆனால் சேனாபதி மாவட்டத்துக்கு சென்ற பேருந்து குக்கி இனத்தவர்கள் அதிகம் வசிக்கும் காங்போக்பி மாவட்டம் காம்கிபாய் பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது குக்கி சமூகத்தை சேர்ந்த போராட்டக்காரர்கள் பயணிகள் பேருந்து மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதேபோல் தேசிய நெடுஞ்சாலை-2ல்(இம்பால் – திமாபூர் நெடுஞ்சாலை)யில் போராட்டக்காரர்கள் சாலைகளில் டயர்களை எரித்தும், அந்த வழியே சென்ற வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியும் வன்முறையில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர். இதில் பலர் காயமடைந்தனர். இதனிடையே, இம்பால் மேற்கில் இருந்து 18கிமீ தொலைவில் உள்ள சேக்மாய் என்ற இடத்தில் மெய்டீஸ் சமூகத்தினர் அமைதி பேரணி ஒன்றை நடத்த திட்டமிட்டிருநதனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் குக்கி சமூகத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து மெய்டீஸ் சமூகத்தின் அமைதிப்பேரணி காங்போக்பி மாவட்டத்தை அடைவதற்கு முன்பே பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
முன்அனுமதி பெறாமல் பேரணி சென்றதாலும், வன்முறை சம்பவங்களை தடுக்கவுமே பேரணி தடுத்து நிறுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காம்கிபாய், மோட்பங் மற்றும் கீதெல்மன்பி உள்ளிட்ட மாவட்டங்களில் குக்கி சமூகத்தினருக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்களில் லால்கவுதாங் சிங்சிட் என்ற குக்கி போராட்டக்காரர் உயிரிழந்தார். மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இதனால் மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல் நிலவுவதால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
The post அமித்ஷா உத்தரவுப்படி போக்குவரத்தை சரி செய்ய முயன்ற போது மோதல் மணிப்பூரில் மீண்டும் பயங்கர வன்முறை: பாதுகாப்பு படையினர், போராட்டக்காரர்கள் மோதல், ஒருவர் பலி appeared first on Dinakaran.
