ஆண்டுதோறும் மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழக அரசின் சார்பில் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி சமூக நலத்துறை மற்றும் மகளிர் மேம்பாட்டு துறை சார்பில் கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட மகளிர் ‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த ‘உலக மகளிர் தின விழா’ நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர், அவர் பேசியதாவது: மார்ச் 1 – என்னுடைய பிறந்தநாள்; மார்ச் 8 – உலக மகளிர் நாள். மகளிர் நாள் கொண்டாடப்படுகின்ற இதே மார்ச் மாதத்தில் பிறந்தவன் என்பதை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். சமூகத்தின் சரிபாதியான மகளிருக்கான நாள் இது. இங்கே ஆண்களுக்கு என்ன வேலை? என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ‘தாயில்லாமல் நானில்லை’ என்று சொல்லத்தக்க வகையில், ‘பெண்கள் இல்லாமல் ஆண்கள் இல்லை’ என்பதை உணர்ந்த ஆண்கள் நாங்கள் என்பதால், உங்களோடு சேர்ந்து உலக மகளிர் நாள் விழாவில் கலந்துகொண்டு இருக்கிறோம்.
நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், புதுமைப்பெண், விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, மக்களை தேடி மருத்துவம், முதலமைச்சரின் காலை உணவு திட்டங்களில் மகளிர் சுய உதவிக் குழுவினரை பங்கு பெறச் செய்திருக்கிறோம். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் குழந்தை திருமணங்களை தடுத்து அவர்களை பாதுகாக்க ‘பாலின வள மையங்கள்’, உள்ளாட்சியில் பெண்களை அதிகாரம் மிக்கவர்களாக உயர்த்த, 50 விழுக்காடு பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்கினோம். அதில் வெற்றி பெற்றதில் 70 விழுக்காட்டுக்கும் மேற்பட்டவர்கள் சுய உதவிக்குழு மகளிர்தான்.
வேலை செய்யும் பெண்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு நாம் தொடங்கிய தோழி விடுதிகளுக்கு பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் அறிவிக்க விரும்புவது, புதிதாக காஞ்சிபுரம், ஈரோடு, தர்மபுரி, சிவகங்கை, தேனி, கடலூர், நாகை, ராணிப்பேட்டை, கரூர் ஆகிய ஊர்களில் ரூ.72 கோடியில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமையும். அதுவும், 24 மணிநேரமும் பாதுகாவலர், பயோமெட்ரிக் நுழைவு முறை, வைபை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வசதிகளுடன் அமைக்க இருக்கிறோம்.
நான் எங்கே சென்றாலும், அங்கே கூடுகின்ற கூட்டத்தில் அதிகம் இருப்பது பெண்கள்தான். “பெண்களின் உரிமையை அனைத்து தளங்களிலும் உறுதிசெய்கின்ற ஆட்சியாக, கோரிக்கைகள் வைக்காமலேயே நிறைவேற்றுகின்ற ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி இருக்கிறது” என்று நீங்கள் பாராட்டுகிறீர்கள். அந்த தருணம், ‘இதுதான் ஆட்சியின் பலன் – இதற்காகத்தான் ஆட்சிக்கு வந்தேன்’ என்று நினைத்து, நினைத்து நான் பூரிப்படைகிறேன்.
இந்த நிகழ்ச்சி அரங்குக்கு வருவதற்கு முன்னால், விழா அரங்கின் வாயிலில், 250 ஆட்டோக்களை பயனாளிகளுக்கு வழங்கி கொடியசைத்து தொடங்கி வைத்துவிட்டு தான் வந்திருக்கிறேன். சென்னை மாநகரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்கின்ற விதமாகவும், பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்குகின்ற விதமாகவும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தலா ஒரு லட்சம் ரூபாய் அரசு மானியத்துடன் 250 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பிங்க் நிற ஆட்டோக்களை வழங்கி இருக்கிறோம்.
இதில், காவல்துறை உதவி எண்களுடன் இணைக்கப்பட்ட ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டிருக்கிறது. இன்று தமிழ்நாடு முழுவதும் 34,073 சுய உதவி குழுக்களை சேர்ந்த 4 லட்சத்து 42 ஆயிரத்து 949 மகளிருக்கு ரூ.3,190 கோடி வங்கி கடன் இணைப்புகளை வழங்கி இருக்கிறேன். இதை தொடங்கி வைக்கின்ற விதமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் செயல்படுகின்ற 3,584 சுய உதவி குழுக்களை சேர்ந்த 46,592 மகளிருக்கு ரூ.366.26 கோடி வங்கி கடன் இணைப்புகளை வழங்க இருக்கிறேன்.
வங்கி கடன் இணைப்புகளை பெற்ற மகளிர் குழு சகோதரிகளை கேட்டுக் கொள்வது, அந்த தொகையை நாங்கள் வழங்குகின்ற கடன் என்று நினைக்காமல், நம்முடைய அரசும், நானும் உங்கள் மேல் வைத்திருக்கின்ற நம்பிக்கையின் அடையாளமாக நீங்கள் நினைக்க வேண்டும். சிறந்த தொழில் முனைவோராக உயர்ந்திட வாழ்த்துகிறேன். தமிழ்நாடு காவல் துறை சார்பில், பெண் அதிரடிப்படை காவலர்கள் இங்கே சாகச நிகழ்ச்சிகளை எல்லாம் செய்து காண்பித்தார்கள். மேலும், எனக்கு அணிவகுப்பு மரியாதையும், பாதுகாப்பும் வழங்குகிறார்கள்.
அதை பார்க்கும்போது, அறிவிலும், வீரத்திலும், சிறந்த சங்க கால வீரத் தமிழச்சிகளை நேரில் பார்த்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. நம்முடைய ஆட்சியின் இலக்கணம் மகளிர் உயர, மாநிலம் உயரும் அதுதான். அனைத்து துறைகளிலும், எங்கு பார்த்தாலும், பெண்கள்தான் இருக்கிறீர்கள். தடைகளை தாண்டி சாதனைகளை படைக்கின்ற உங்களை பாராட்டாமல் எப்படி இருக்க முடியும்? இந்த ஆண்டுக்கான அவ்வையார் விருது பெறக்கூடிய டாக்டர் யசோதா சண்முக சுந்தரம்,
பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்ற கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த சவுமியா, பெண் குழந்தைகள் பாலின விகிதத்தை உயர்த்துகின்ற வகையில் சிறப்பாக செயல்பட்ட கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் ஆகியோருக்கும், நன்னிலம் நில உடைமை திட்டத்தின் கீழ் நில உதவியும், நிதி உதவியும் பெறக்கூடிய 5 பேர் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வெளிநாடு சென்று பட்டமேற்படிப்பு படிக்கச் செல்லும் 5 மாணவியர், தொழிலாளர் நலத்துறையின் சார்பில், உதவி பெறும் 50 மகளிர் ஆகிய அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகள், வாழ்த்துகள்.
இன்றைக்கு நாம் கொண்டாடுகின்ற மகளிர் தினமானது கல்வி, சமவாய்ப்பு, சுதந்திரம், பெண்ணுரிமை, சுயமரியாதை, தன்னம்பிக்கை, தற்சார்பு, வேலைவாய்ப்பு போன்றவற்றில் மகளிர் தங்களுடைய உரிமைகளை போராடி வென்றெடுத்த தினம். உங்களுடைய மன வலிமையையும், ஆளுமை திறனையும், நினைப்பதை நிறைவேற்றுகின்ற ஊக்கத்தையும் பார்க்கும்போது, நான் பெருமிதம் அடைகிறேன். இந்த காட்சியை 50 ஆண்டுகளுக்கு முன்னால் அவ்வளவு சுலபமாக பார்க்க முடியாது. 100 ஆண்டுகளுக்கு முன்னால் பார்க்கவே முடியாது.
ஆனால், அனைத்து பக்கமும் பெண்கள் வந்துவிட்டார்கள். நான் முதலமைச்சராக அனைத்து மக்களுக்கும் வைக்கக்கூடிய கோரிக்கை, ஆணாதிக்க மனோபாவம் மறைய வேண்டும். பெண்கள் நமக்காக தியாகம் செய்ய பிறக்கவில்லை, அவர்களும் நம்மைப் போலவே, அனைத்து உரிமைகளும் கொண்ட சக மனிதர் என்று எண்ணமும் எல்லோருக்கும் தோன்ற வேண்டும். அரசியலில், வேலை பார்க்கின்ற இடத்தில் என்று அனைத்து இடங்களிலும் உரிய மதிப்பும், மரியாதையும், பாதுகாப்பும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
கேலி பேசுவதும், அவர்கள் வளர்ச்சியை கொச்சைப்படுத்துவதும் இருக்கவே கூடாது. அதுதான் உண்மையான சமுதாய சிந்தனை வளர்ச்சி. இதை எல்லோரும் கடைபிடிக்க வேண்டும். திராவிட மாடல் அரசில் பெண்களுக்கான திட்டங்களை பார்த்து பார்த்து இப்போது ஆண்களும் கேட்க ஆரம்பித்து விட்டார்கள். “என்னங்க எல்லா திட்டங்களும் பெண்களுக்கு தானா, எங்களையும் கொஞ்சம் கவனியுங்கள்” என்று ஆண்கள் கேட்கக்கூடிய அளவில் தான் இன்றைக்கு செயல்படுகிறோம். அது தொடரும்.
மகளிர் உரிமைத் தொகையால் பெண்கள் தங்களுடைய குடும்பத்தை பாதுகாக்கிறார்கள். அது ஆண்களையும் சேர்த்துதான் வளர்ச்சியடைய செய்யும். என்னை தங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நினைத்து, பாசம் காட்டுகின்ற அத்தனை தாய்மார்கள் – அவர்கள் குடும்பத்தின் ஆண்கள் என்று அனைத்து தரப்பிற்குமான நல்லாட்சியாக, திராவிட மாடல் ஆட்சி எப்போதும் தொடரும்.
எனது அருமை சகோதரிகளே, நீங்கள் கடமை செய்ய மட்டுமல்ல, உரிமை பெறவும் பிறந்தவர்கள்.
அன்புடன், பண்பும் சேர்ந்து வீரமும், விவேகமும் உங்களுடைய அணிகலன் ஆகட்டும். அறிவும், துணிச்சலும் உங்கள் அடையாளமாக ஆகட்டும். சாதனைகள் மூலமாக உயருங்கள். ஒவ்வொரு பெண்ணும், மதிப்பிட முடியாத ஆற்றல். உலகம் உங்களுடையது, உங்களுக்கானது! என்று உங்கள் சாதனைகள் தொடரட்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, சி.வி.கணேசன், கயல்விழி செல்வராஜ், மேயர் பிரியா, எம்பிக்கள் தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, கனிமொழி சோமு, மகளிர் ஆணையத்தின் தலைவர் குமரி, தலைமை செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், கூடுதல் தலைமை செயலாளர்கள் சுப்ரியா சாகு, பிரதீப் யாதவ், துறை செயலாளர்கள் ஜெயஸ்ரீ முரளிதரன், வீரராகவ ராவ், மேலாண்மை இயக்குநர் ஸ்ரேயா சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மகளிர் காவலர்கள், சுயஉதவி குழுவினர், மாணவிகளின் கணகவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
* 1000 மகளிர் சுய உதவி குழுவினருக்கு சலுகைகள்
விழாவில், 1000 மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த அடையாள அட்டை வைத்துள்ள சுய உதவி குழுவினர் தாங்கள் தயாரிக்கின்ற பொருட்களை கிராம மற்றும் நகர பேருந்துகளில் 25 கிலோ வரை கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம்.
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்தவர்கள் பயன்களை பெறலாம். கூட்டுறவு வங்கிகள் மூலமாக பெறப்படுகின்ற பல்வேறு கடன்கள் பெற முன்னுரிமை. கோ-ஆப்டெக்ஸ் பொருட்களுக்கு 5 விழுக்காடு கூடுதல் தள்ளுபடி. ஆவின் பொருட்களுக்கு குறைந்த விலை. இ-சேவை மையங்களில், 10 விழுக்காடு சேவை கட்டணம் குறைவு. இதையெல்லாம் சிறந்த முறையில் பயன்படுத்தி நீங்கள் வளம்பெற வாழ்த்துவதாக முதல்வர் கூறினார்.
The post காஞ்சி, ராணிப்பேட்டை உள்பட 9 நகரங்களில் ரூ.72 கோடியில் புதிய தோழி விடுதிகள்: 250 பெண்களுக்கு ‘பிங்க்’ ஆட்டோ, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.
