இந்த தேர்வை எழுத தகுதியானவைகளான பிளஸ் 2 படிப்பில் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல்/பயோடெக்னாலஜி, பாடங்கள் படித்திருக்க வேண்டும். இந்த பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு இந்த மதிப்பெண்களில் 10 சதவீதம் தளர்வு உண்டு. 17 வயது நிரம்பியவர்களாக இருக்க வேண்டும். ஆனால், தேர்வு எழுத அதிகபட்ச வயது வரம்பு குறிப்பிடவில்லை. எந்த வயதிலும் இந்த தேர்வு எழுதலாம். தேசிய அளவில் நடத்தப்படும் நீட் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. குறிப்பாக, மே மாதம் இந்த தேர்வு நடத்தப்படும். ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்குமற்றும் உருது ஆகிய மொழிகளில் இந்த தேர்வு நடத்தப்படும்.
இதனிடையே தேசிய மருத்துவ ஆணையம் தெரிவித்தபடி, தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அல்லது நீட் (யுஜி)-2025, பேனா மற்றும் காகித முறையில் (ஓஎம்ஆர் அடிப்படையில்) ஒரே நாளில், ஒரே கட்டமாக நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்திருந்தது. இந்த சூழலில் 2025-26-ம் கல்வியாண்டு மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கை நீட் நுழைவுத்தேர்வு, வருகிற மே 4ம் தேதி நடக்கிறது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது. இதற்கான கால அவகாசம் நாளை இரவு 11.50 மணியுடன் நிறைவடைகிறது. தேர்வர்கள், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்கள், அதில் திருத்தங்கள் மேற்கொள்ள வருகிற 9, 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள், வருகிற ஏப்ரல் 26ம் தேதியும், தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மே 1ம் தேதியும் வெளியிடப்படப்படுகிறது.
The post மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: தேர்வுக்கான ஹால்டிக்கெட் மே 1ம் தேதி வெளியீடு appeared first on Dinakaran.
