ஜெயக்குமார் (அதிமுக): தற்போது உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு குறையாமலும் , தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்ட பின்னரும் இருக்கும்படி நிர்ணயம் செய்தால் தான் மக்கள் தொகையை குறைத்த தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும் முடிவாக அமையும் அல்லது தற்போது உள்ள மொத்த மக்களவை தொகுதிகள் 543 என்பதை மாற்றாமல் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மக்களவை தொகுதியின் சராசரி மக்கள் தொகை அடிப்படையில் மாநிலத்திற்குள்ளேயே மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மாறாமல் மறுசீரமைப்பு செய்தால் எந்த மாநிலத்திற்கும் பாதிப்பு ஏற்படாது.
செல்வபெருந்தகை (காங்கிரஸ்): தமிழ்நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்த ஒன்றிய அரசு முயற்சி செய்துக்கொண்டு இருக்கிறது. இதனை முறியடிக்கும் விதமாக தென்னிந்தியாவின் முதல் குரலாக முதல்வர் பதிவு செய்துள்ளார். தொகுதி வரையறையால் தமிழகத்திற்கு எந்த மாற்றமும் இருக்காது என ஒன்றிய உள்துறை அமைச்சர் கூறுகிறார். ஆனால், வட மாநிலங்களான உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு உயர்த்த மாட்டோம் என கூறவில்லை. எனவே, முதல்வரின் முடிவிற்கு அனைவரும் ஒத்துழைப்போம்.
வைகோ (மதிமுக): தொகுதி மறுசீரமைப்பால் தென்னிந்திய மாநிலங்களுக்கு மிகவும் பாதகத்தை ஏற்படுத்தும் சாத்திய கூறுகள் அதிகம். மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் வரையறை செய்யப்படும் போது மக்கள் தொகை குறைவாக உள்ள தென்னிந்தியாவிற்கு மக்கள் தொகை வளர்ச்சி அதிகமாக உள்ள வட இந்தியாவுடன் ஒப்பிட்டால் தொகுதிகளின் விகிதாசாரம் குறையும். இந்த கூட்டத்தின் வந்த அனைத்து கட்சிகளும் மிக பொறுப்போடு பங்கேற்றுள்ளனர். இனி வரக்கூடிய காலத்தில் வராத கட்சிகளும் வர முயற்சிக்க வேண்டும். முதல்வரின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம்.
அன்புமணி (பாமக): முதல்வர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம் அவசியம் மற்றும் அவசரமான ஒன்றாகும். கட்டாயம் மறுசீரமைப்பை கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு அவர்களுக்குள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று தெளிவாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தென் மாநில முதல்வர்களை நேரில் சந்தித்து தொடர்ந்து சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
திருமாவளவன் (விசிக): 50 மாநிலங்கள் கொண்ட ஒரு நாடான அமெரிக்கா 100 ஆண்டுகளாக ஒரே எண்ணிக்கையை தான் அவர்கள் தக்கவைத்துள்ளார்கள். அங்கேயும் இதேபோல, பிரதிநிதித்துவ ஜனநாயகம் தான் நடைமுறையில் உள்ளது. எனவே, நமது எண்ணிக்கையின் சமநிலை மாறக்கூடாது. எண்ணிக்கை மாற்ற வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்போம். அதனை தொடர்ந்து வலியுறுத்துவோம். அதேபோல், முதல்வர் தென்னிந்திய மாநிலங்களை ஒருங்கிணைப்பதற்கான நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு கூட்டு நடவடிக்கை குழுவை அமைப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிந்துள்ளதை நாங்கள் வழிமொழிகிறோம்.
சண்முகம் (மாக்சிஸ்ட்): வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியதை வரவேற்கிறோம். இது ஒரு அகில இந்திய பிரச்சனை. ஒன்றிய அரசு தொகுதி எண்ணிக்கையை உயர்த்துகின்ற போது எந்த மாநிலங்களும் பாதிக்கக்கூடாது; சமச்சீரான தொகுதி எண்ணிக்கை உயர்த்தப்பட வேண்டும். கூட்டுக்குழு அமைப்பதற்கான நடவடிக்கையில் கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு சிறந்த யோசனையாக பார்க்கிறோம்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): ஒன்றிய அமைச்சர் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறையாது என்றும் கூறினார். அதேபோல், விகிதாசார அடிப்படையில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படும் எனவும் கூறினார். குறிப்பாக, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக மற்ற மாநிலங்களை காட்டிலும் குடும்ப கட்டுப்பாடு போன்ற சிறப்பான பங்களிப்பை தமிழகம் செய்துள்ளது. அதுபோன்ற திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக தண்டிப்பது என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. மறுசீரமைப்பை கட்டாயம் கொண்டுவருவோம் என ஒன்றிய அரசு நினைத்தால் அதனை எதிர்த்து தென் மாநில கட்சிகளை ஒன்றினைத்து உரிமைக்காக, நியாயத்திற்காக முதல்வர் போராடி வெற்றி பெற நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
கி.வீரமணி ( திராவிடர் கழகம்): தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு கட்சியின் பிரச்சனை இல்லை; நம் மாநிலத்தின் பிரச்சனை என்பதை அனைத்துக்கட்சி கூட்டத்தை புறக்கணித்துள்ள கட்சிகள் உணரவேண்டும். தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழகம் எட்டு தொகுதிகளை இழக்க நேரிடும். எனவே, விரைவாக ஒத்த கருத்துள்ள மாநிலங்களை எல்லாம் ஒருங்கிணைந்து இதனை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்லக்கூடிய கடமையை நாம் தவறாமல் செய்வோம்.
இளங்கோவன் (தேமுதிக): எந்தகாலத்தில் நடக்க வேண்டுவோ அதன்படி இந்த கூட்டம் நடந்துள்ளது. தமிழகத்தை காப்பற்ற வேண்டும் எண்ண ஓட்டத்தில் கொண்டுவரப்பட்ட இந்த தீர்மானத்தினை தேமுதிக முழு மனதாக ஆதரிக்கிறது. இதற்காக எதற்கு துணை நிற்போம் என்ற உறுதியினை அளிக்கிறோம்.
பழ. நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி ): ஹிந்தி பேசுகின்ற மாநிலங்களின் ஆட்சி தான் ஒன்றியத்தில் ஏற்படுத்திகின்ற திட்டத்துடன் தான் காய்களை நகர்த்துகின்றனர். தென் மாநில முதல்வர்களை மட்டுமல்லாது, எதிர்க்கட்சி ஆளும் முதல்வர்களையும் ஒருங்கிணைத்து பேசி இந்த சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும் என முதல்வரை கேட்டுக்கொள்கிறேன். வரலாற்றில் திருப்புமுனை ஏற்படும் சூழ்நிலை இன்றைக்கு உருவாகி உள்ளது. அது உங்கள் மூலம் அந்த சூழ்நிலை வெற்றி பெற வேண்டும்.
கமலஹாசன் (மக்கள் நீதி மய்யம்): கொள்கை முரண்பாடுகளை ஒதுக்கிவிட்டு தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றுபட்டுள்ளோம். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதிகளின் மறுவரையறை என்பது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஆந்திரா, கர்நாடகா, கேரளா, பஞ்சா, ஒடிசா, மேற்குவங்கம், ஹிமாச்சல், உத்தராகாண்ட் உள்ளிட்ட வடகிழக்கு மரநிலங்களுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்தியாவை ஹிந்தியாவாக மாற்றாதீர்கள். மக்களவையிலும், மாநிலங்களவையிலும் சரி தற்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்ற வேண்டிய அவசியமே இல்லை.
ஈஸ்வரன் ( கொங்கு மக்கள் தேசிய கட்சி): நமக்கான நாடாளுமன்ற விகிதாச்சாரம் 7.2 சதவீதம். அதேபோல், எல்லா மாநிலங்களுக்கும் உண்டு. அதில் எந்தவிதமான குறைவும் வரக்கூடாது. முதல்வர் கொண்டுவந்துள்ள தீர்மானத்தை வரவேற்று எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணையாக இருப்போம்.
வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): எந்த அரசுகள் வந்தாலும், தென்மாநிலத்தையும் குறிப்பாக தமிழகத்தையும் வஞ்சிக்கும் செயலில் தான் ஈடுபடுகின்றன. மிகப்பெரிய பாதிப்பை நோக்கி தமிழ் சமூகம் சந்தித்துக்கொண்டு இருக்கிறது. இதுபோன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தின் மூலமாக ஒரு எச்சரிக்கை உணர்வை முதல்வர் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பு உள்ளிட்ட மாநில மக்களின் உரிமைகளை காப்பதற்காக நடத்திய அனைத்து கட்சி கூட்டம் என்பது சரியான நேரத்தில் சரியான முடிவு அதற்கு பாராட்டுக்களையும் எங்களின் முழு ஆதரவையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி): தொகுதி மறுவரையறை மூலம் தென்மாநிலங்கள் தங்களின் பிரதிநிதித்துவத்தை நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் இழக்கும் என்பதை உணர்ந்து முதல்வர் முதலாவதாக குரல் கொடுத்துள்ளார். இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதால் அதனுடைய பிரதிநிதித்துவம் குறைப்பது தண்டனை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும். எனவே, முதல்வரின் தீர்மானத்தை முழுமனதாக ஏற்று அதனை ஆதரிக்கின்றோம்.
தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி): தொகுதி மறுவரையால் பாதிக்கப்படும் மாநிலங்களின் உச்சி மாநாட்டை முதல்வர் நடத்த வேண்டும். ஒருநாள் பொது வேலைநிறுத்தத்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு பேசினர்.
* தொகுதி மறுசீரமைப்பு குறித்த தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகள் ஆதரவுக்கு அரசியல் எதுவும் இல்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் தொகுதி மறுவரையறை குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிறகு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களை சந்தித்து பேசியதாவது: முதல்வர் கொண்டு வந்த தீர்மானங்களில் அனைத்துக் கட்சிகளும் கொடுத்துள்ள கருத்துக்கள் அடிப்படையில் சில திருத்தங்களை மேற்கொண்டோம். தொகுதி மறுவரையறை சார்ந்த தீர்மானங்களுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் தமிழ்நாடு அரசின் சார்பில் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும், தென்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு குறித்து வரக் கூடிய காலங்களில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். இதில் அரசியல் செய்ய ஏதும் இல்லை. எந்தவித அரசியல் உள்நோக்கமும் இல்லை. முழுக்க முழுக்க தமிழ்நாட்டின் நலன் சார்ந்து, மாநில உரிமைகளை காக்க இந்த தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
The post முதல்வரின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்று இணைந்து போராடுவோம் தொகுதி மறுவரையறை விவகாரத்தில் 7.2 சதவீதத்தை மாற்றக்கூடாது: அனைத்துக்கட்சி தலைவர்கள் உறுதி appeared first on Dinakaran.
