கோவை, மார்ச் 5: கோவையில் சிமெண்ட் சீட்டை அகற்றியபோது 15 அடி உயரத்தில் இருந்து விழுந்து தொழிலாளி பலியான சம்பவத்தில் கட்டிட உரிமையாளர் உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை ரத்தினபுரி சுப்பாத்தாள் லே-அவுட்டை சேர்ந்தவர் செல்வக்குமார் (47), கட்டிட தொழிலாளி. இவர், கடந்த மாதம் 25ம் தேதி இருகூர் ராம்நகரில் நடந்து வரும் கட்டிட பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அவர், அங்கு சிமெண்ட் சீட்டை அகற்றியபோது எதிர்பாராத விதமாக சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு கால்கள் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டி இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதற்கு போதிய வசதி இல்லாததால், அவரது குடும்பத்தினர் செல்வக்குமாரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 2ம் தேதி செல்வக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செல்வக்குமாரின் மகன் பிரவீன்ராஜ் (23), சிங்காநல்லூர் போலீசில் அளித்த புகாரின்பேரில், போலீசார் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக கட்டிட உரிமையாளர் சிவசங்கர் மற்றும் மேஸ்திரி மணிகண்டன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
The post கட்டிட உரிமையாளர் உட்பட 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.