தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் நியமனத்தில் அரசியல் எதுவுமில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவுக்கு தமிழக அரசு சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக பதவியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற டிஜிபியை நியமிக்கும் வகையில் கடந்த 1991ம் ஆண்டு சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக சீமா அகர்வால் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பதவி வகித்தார்.

அதன் காரணமாகவே அவர் மாற்றப்பட்டு சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். 2012-2020ம் ஆண்டு வரை பல்வேறு காலக்கட்டங்களில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலராக சுனில்குமார் இருந்துள்ளார். அதனால் அவருக்கு அந்த துறை குறித்து நன்கு தெரியும். சுனில்குமார் ஓய்வுப் பெற்று இருந்தாலும் கூட வாரியத்தின் தலைவராக பணியாற்றும் போது அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டவர். தமிழ்நாட்டில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் உள்ள பதினோரு அதிகாரிகளும் மற்ற துறைகளில் பணியாற்றி வருவதால் ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமார் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதில் அரசியல் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. பதில் மனுவை படித்து பார்த்த நீதிபதி, விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

The post தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் நியமனத்தில் அரசியல் எதுவுமில்லை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: