கோவை, மார்ச் 4: இந்திய சிலம்பம் சங்கம் சார்பில், தேசிய அளவிலான 6வது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி கோவையை அடுத்த வெள்ளக்கிணறு பகுதியில் நேற்று துவங்கியது. இந்திய சிலம்பம் சங்க செயலாளர் தியாகு நாகராஜ் தலைமை தாங்கினார். இளைஞர் மக்கள் இயக்க தலைவர் சிவசுரேஷ் மற்றும் இயக்குனர் சிந்து ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு, இப்போட்டியை துவக்கிவைத்தனர். டாக்டர் பிரபாவதி கவுரவ அழைப்பாளராக கலந்துகொண்டார்.
இப்போட்டியில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, மான் கொம்பு, வேல் கம்பு, இரட்டை கம்பு, சுருள் வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இப்போட்டி நடந்தது. 4 வயது சிறுவர் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இப்போட்டியில் பங்கேற்று, அசத்தினர்.
இதில் தேர்வு செய்யப்படும் வீரர், வீராங்கனைகள், கோவாவில் நடைபெற உள்ள சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர். இப்போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு சிலம்பம் கமிட்டி தலைவர் பாலமுருகன், செயலாளர் அர்ஜூன், இந்திய சிலம்பம் சங்க தொழில்நுட்ப இயக்குனர் பாக்கியராஜ், மகளிர் அணி தலைவி சங்கீதா மற்றும் சிவமுருகன், அரவிந்த் உள்பட பலர் செய்தனர்.
The post மணமக்களுக்கு எம்பி வாழ்த்து தேசிய அளவிலான 6வது சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி appeared first on Dinakaran.
