வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாமக கவுன்சிலர் திடீர் போராட்டம்

 

வானூர் பிப். 26: வானூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இயங்கி வருகிறது. இதில் ஒன்றிய கவுன்சிலராக பாமகவை சேர்ந்த மகாலட்சுமி மகாலிங்கம் இருந்து வருகிறார். மேலும் இவரது கணவர் மகாலிங்கம் பாமக ஒன்றிய செயலாளராக இருந்து வருகிறார். இவர்கள் இருவரும் நேற்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு கூட்டத்துக்கு வருகை தந்தனர். அப்போது திடீரென அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், தங்களுடைய பகுதிக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆரோவில் போலீசார், அவர்களை அழைத்து சென்று காவல் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவதாஸ் மற்றும் கார்த்திகேயன் ஆகியோரும், காவல் நிலையம் வருகை தந்து ஒன்றிய கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். இதையடுத்து கவுன்சிலரும், ஒன்றிய செயலாளரும் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு மீண்டும் வந்தனர். தொடர்ந்து அங்கு நடந்த ஒன்றிய குழு கூட்டத்தில் கவுன்சிலர் மகாலட்சுமி கலந்து கொண்டார்.

The post வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பாமக கவுன்சிலர் திடீர் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: