ரூ.50,000 கோடியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து காசி கோயிலுக்கு ரோப்வே வசதி: கலெக்டர் எஸ்.ராஜலிங்கம் தகவல்

* தினமும் 1 லட்சம் பேர் வரை பயணிக்கலாம்

வாரணாசி: வாரணாசி ரயில் நிலையத்திலிருந்து காசி கோயிலுக்கு ரோப் வே வசதி ரூ.807 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தப் பணி நிறைவடையும் என வாரணாசி கலெக்டர் எஸ்.ராஜலிங்கம் கூறினர். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி வாரணாசியில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி தொடங்கியது. 24 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த ஏற்பாட்டில் வாரணாசியில் முக்கிய பொறுப்பு வைக்கும் வாரணாசி கலெக்டர் எஸ்.ராஜலிங்கம், தமிழத்தை சேர்ந்தவர். 2009 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், 2022 நவம்பர் முதல் வாரணாசி கலெக்டராக உள்ளார்.

இவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காசி தமிழ்ச் சங்கம் நிகழ்வு காரணமாக தமிழகத்தில் இருந்து இங்கு வருபவர்கள் எண்ணிக்கையில் ஆண்டுக்கான அதிகரித்து வருகிறது. இந்த நிகழ்வை ஒட்டி திருக்குறள் பத்துப்பாட்டு எட்டுத்தொகை போன்ற தமிழ் இலக்கியங்கள் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இவற்றைக் காட்சிப்படுத்தியிருந்தோம். இதனால் தமிழ் இலக்கியத்தை பற்றிய புரிதல் வட மாநிலத்தவர் இடையே அதிகரித்துள்ளது.

உள்கட்டமைப்பு ஏற்பாடுகளை பொறுத்தவரை, காசியில் ரயில், விமானம் மற்றும் நீர்வழி போக்குவரத்தை மேலும் மேம்படுத்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மொத்தம் ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. காசி ராம் நகரில் ஒரு துறைமுகம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்குவங்கம் வரை சரக்குகளை கொண்டு செல்ல முடியும்.
இது தவிர ரோப்வே திட்டமும் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பேர் வரை பயணிக்க முடியும்.

காசி கோயிலில் இருந்து ரயில் நிலையம் வரை 4 நிறுத்தங்கள் இருக்கும். இது வெளி மாநிலத்தில் இருந்து காசி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மட்டுமின்றி உள்ளூர் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசலும் குறைய வாய்ப்புகள் உள்ளன. இந்த வசதி மூலம் 10 நிமிடங்களில் ரயில் நிலையத்திலிருந்து காசி கோயில் வளாகத்தை அடையலாம்.

தற்போது ரயில் நிலையத்திலிருந்து காசி கோயில் வரை செல்ல 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகிறது. இந்தத் திட்டம் மட்டும் ரூ.807 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடப்பு ஆண்டிலேயே நிறைவடையும். மேலும் வாரணாசி இந்து அறிவியல் பல்கலைக்கழகத்தை எய்ம்ஸ் போல் மேம்படுத்தும் திட்டமும் பரிசீலிக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

* 10 கோடிக்குமேல் பக்தர்கள் வருகை
பிராயாக்ராஜில் கும்பமேளா நடப்பதால் அங்கு வரும் பெரும்பாலான பக்தர்கள் காசி விஸ்வநாதரை தரிசிக்க வருகின்றனர். 10 கோடி பேர் வருவார்கள் என எதிர் பார்த்தோம். ஆனால் அதைவிட அதிகமாகவே வந்து கொண்டிருக்கிறார்கள். தினமும் 7 முதல் 8 லட்சம் பேர் தரிசனம் செய்ய வருகின்றனர். சிவராத்திரி அன்று 12 லட்சம் பேர் வரை வருவார்கள் பார்க்கிறோம். பொதுமக்கள் தவிர நாகசாதுக்களும் வருவார்கள் . இதற்கேற்ப பாதுகாப்பு, வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது என, கலெக்டர் ராஜலிங்கம் கூறினார்.

* காசி கோயில்களுக்கு ஓதுவார்கள் நியமிக்கப்படுவார்களா?
காசி விஸ்வநாதர் கோயிலில் ஓதுவார்கள் நியமிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சிவன் கோயில்களில் ஓதுவார்கள் கலெக்டர் ராஜலிங்கம், “காசி கோயில் தனியார் அறக்கட்டளை மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் முடிவு செய்தால் அல்லது பரிந்துரை வந்தால் இது சாத்தியமாகும்,” என்றார். காசியில் தமிழ்ச் சங்கமம் நடத்தப்படுவது போல் சங்கம் வளர்த்த தமிழ் மதுரையில் இதுபோன்ற நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த கலெக்டர் ராஜலிங்கம், தமிழ்நாட்டில் இந்த விழா நடத்தப்படுவது சிறப்புடையதாக அமையும். இது குறித்த கோரிக்கை வந்தால் பரிசீலிக்கப்படும், என்றார்.

The post ரூ.50,000 கோடியில் உள்கட்டமைப்பு திட்டங்கள் வாரணாசி ரயில் நிலையத்தில் இருந்து காசி கோயிலுக்கு ரோப்வே வசதி: கலெக்டர் எஸ்.ராஜலிங்கம் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: