இந்நிலையில் பிரதமர் மோடியின் முதன்மை செயலாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநருமான சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவரது நியமனத்துக்கு ஒன்றிய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சக்தி காந்த தாஸ், தமிழ்நாட்டில் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக தன் பயணத்தை தொடங்கினார்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் ஆட்சியராகவும், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் செயலாளராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் சக்தி காந்த தாஸ். பின்னர் ஒன்றிய அரசு பணிக்கு சென்று, நிதித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து வந்த சக்தி காந்த தாஸ் கடந்த 2018ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
2021ம் ஆண்டு அவரது பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த 2024ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் பிரதமரின் 2வது முதன்மை செயலாளராக சக்தி காந்த தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று வௌியிடப்பட்டது. அவரது பதவிக்காலம் பிரதமரின் பதவிக்கு இணையாக அல்லது மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* 2 முதன்மை செயலாளர்களும் ஒடிசாவை சேர்ந்தவர்கள்
பிரதமரின் முதன்மை செயலாளராக பணியில் உள்ள பி.கே.மிஸ்ரா ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர். குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியான பி.கே.மிஸ்ராவுக்கு, மோடி 3ம் முறையாக பிரதமர் பதவி ஏற்றபோது, அவரது முதன்மை செயலாளராக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. தற்போது தமிழ்நாடு கேடர் ஐஏஎஸ் அதிகாரியும், ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவருமான சக்தி காந்த தாஸ் 2வது முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமரின் 2 முதன்மை செயலாளர்களும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்களாக நியமிக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் சக்திகாந்ததாசுக்கு புதிய பதவி: பிரதமரின் 2வது முதன்மை செயலாளராக நியமனம் appeared first on Dinakaran.
