குடிநீர் விநியோக நேரத்தை குறைத்ததால் பாலத்துறையில் பொதுமக்கள் சாலை மறியல்

மதுக்கரை,பிப்.20: கோவை மாவட்டம்,மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்,பாலத்துறை கிராமத்தில்சுமார் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு 15 நாட்களுக்கு ஒருமுறை பில்லூர் குடிநீர் விநியோகம் செய்வது வழக்கம்.இந்த ஊராட்சியில் பதவி வகித்து வந்த அதிமுகவினர், கடந்த 5 ஆண்டு காலமாக, வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட வரிகளை வசூலிக்காமல் இருந்தால்,ரூ.38 லட்சம் வரிபாக்கி ஏற்பட்டது.

தற்போது உள்ளாட்சி அமைப்புகளின் பதவி காலம் முடிந்து,ஊராட்சி நிர்வாகம் தனி அலுவலர்கள் வசம் வந்துள்ளதால், நிலுவை வரிகளை வசூலிக்க அதிகாரிகளின் உத்ரவை ஏற்று பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நிலுவை வரிகளை வசூலிப்பதற்காக,பாலத்துறையில் குடிநீர் விநியோகம் செய்யும் நேரத்தை ஆறு மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக குறைத்துள்ளனர்.குடிநீர் விநியோகம் செய்யும் நேரத்தை குறைத்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று மாலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வந்த மதுக்கரை இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன்,பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, ஊராட்சி செயலாளர் கல்பனாவை வரவழைத்து, குடிநீர் விநியோகம் செய்யும் நேரம் எதனால் குறைக்கப்பட்டது என்று கேட்டார். அதற்கு ஊராட்சி செயலாளர் கல்பனா,அதிகாரிகளின் உத்ரவுபடி ரூ.38 லட்சம் நிலுவை வரிகளை வசூலிக்க குடிநீர் விநியோகம் செய்யும் நேரத்தை குறைந்துள்ளதாக கூறினார். இதை கேட்ட நவநீதகிருஷ்ணன், வரி பாக்கி என்பதற்காக குடிநீர் விநியோகத்தை நிறுத்த வேண்டாம், உடனடியாக குடிநீரை திறந்து விடுங்கள் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து குடிநீர் திறந்து விடப்பட்டது, அதன் பிறகு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post குடிநீர் விநியோக நேரத்தை குறைத்ததால் பாலத்துறையில் பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Related Stories: