ஓரின சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

 

கடலூர், பிப். 19: ஓரின சேர்க்கைக்கு மறுத்ததால் சிறுவனை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் தாலுகா மேல் புளியங்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் ஆனந்த் (24). இவர் இன்ஜினியரிங் படித்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். இருவரும் ஒரே ஊர் என்பதால் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் ஆனந்த் மாணவனை ஓரினச்சேர்க்கைக்கு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆனந்த் பலமுறை வற்புறுத்தியும் மாணவன் ஓரினச்சேர்க்கைக்கு மறுப்பு தெரிவித்ததால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் அந்த மாணவன் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண்ணிடம் பழகி வந்துள்ளார். இதை தெரிந்து கொண்ட ஆனந்த் இன்ஸ்டாகிராமில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொண்டு, ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காவிட்டால் இதை வெளியில் மற்றவர்களிடம் சொல்லி விடுவேன் என்று மாணவனை மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவன், ஆனந்தின் செல்போனை பிடுங்கி உடைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 3.10.2023 அன்று மாணவன் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்போது ஆனந்த் அவரை வழிமறுத்து கத்தியால் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து முஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சாட்சிகள் விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று இவ்வழக்கில் நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில் ஆனந்த் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஆயுள் தண்டனையும் ₹20 ஆயிரம் அபராதமும் விதித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பாலரேவதி ஆஜராகி வாதாடினார்.

 

The post ஓரின சேர்க்கைக்கு மறுத்த சிறுவனை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: