பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் சென்னையில் அதிநவீன வசதியுடன் 10 காவல் உதவி மையங்கள் திறப்பு: 24 ரோந்து வாகன சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை பெருநகர காவல் துறை சார்பில் குற்றங்களை தடுக்கும் வகையில் பெருநகர கிழக்கு மண்டலத்தில் அதி நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள 10 காவல் உதவி மையங்கள் மற்றும் 24 இரு சக்கர வாகன ரோந்து வாகன சேவையை தொடக்க விழா நேற்று அண்ணாசாலை பார்டர் தோட்டம், மோகன் தாஸ் சாலை பகுதியில் நடந்தது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, காவல் உதவி மையத்தை திறந்து வைத்தார். மேலும், 24 இரு சக்கர ரோந்து வாகன சேவையையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண் பேசியதாவது: கிழக்கு மண்டலத்தில் திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், கீழ்ப்பாக்கம் என 3 மாவட்டங்களை உள்ளடக்கிய அந்தந்த பகுதிக்கு 24 சிறப்பு இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த 24 ரோந்து வாகனங்களும், 24 மணிநேரமும் வேலை செய்யும். ஒவ்வொரு ரோந்து வாகனத்திலும் 2 காவலர்கள் இருப்பார்கள். சுழற்சி முறையில் 3 ஷிப்டுகளில் பணிபுரிவார்கள். அதேபோல் 24 இடங்களில் காவல் உதவி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த காவல் உதவி மையங்களில் எல்லா வசதிகளும் இருக்கிறது.

அந்த பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகள் பார்ப்பது, அங்கு இருக்க கூடிய குற்றங்களை முனைப்பாக கண்காணிப்பது. அதேபோல் அந்த உதவி மையங்களுக்கு வெளியே விளம்பர பலகைகள் இருக்கும். அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது. பொதுமக்கள் இந்த உதவி மையங்களில் அணுகி, அவர்களுடைய குறைகளை எடுத்து சொல்வதற்கு ஏதுவாக 24 உதவி மையங்கள் அமைத்து இருக்கிறோம். அதில் 10 உதவி மையங்கள் தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 உதவி மையங்கள் ஓரிரு நாளில் திறந்து வைக்கப்பட உள்ளது. நமது துணை முதல்வர் சொன்னது போல், குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்.

அதேபோல் குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடிய குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை கலையெடுக்க வேண்டும் என்ற அவர்களின் அறிவுரைக்கு ஏற்ப சென்னை பெருநகர காவல்துறையில் இதை அமைத்து இருக்கிறோம். தற்போது கிழக்கு மண்டலத்தில் ஆரம்பித்து இருக்கிறோம். இதேபோல் மற்ற மண்டலத்திற்கும் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு கமிஷனர் அருண் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை போலீஸ் கமிஷனர் அருண், தெற்கு மண்டல கூடுதல் கமிஷனர் கண்ணன், கிழக்கு மண்டல இணை கமிஷனர் விஜயகுமார், திருவல்லிக்கேணி துணை கமிஷனர் ஜெயச்சந்திரன், மயிலாப்பூர் துணை கமிஷனர் அரி கிரண் பிரசாத் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் சென்னையில் அதிநவீன வசதியுடன் 10 காவல் உதவி மையங்கள் திறப்பு: 24 ரோந்து வாகன சேவையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: