நீதிபதிகள் நியமனத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரே அதிகம் உள்ளனர்: ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் குற்றச்சாட்டு

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் நியமனம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் ஆகியோர் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூட்டாக நிருபர்களிடம் அவர்கள் கூறியதாவது: உயர்நீதிமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் கடந்த 5 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள் நியமனத்தில் பார்க்கும் போது 75 சதவீதம் பேர் உயர் சாதியை சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் 64 சதவீதம் கீழமை நீதிமன்றத்தில் பெண்கள் இருப்பதாகவும், உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் வழக்கறிஞர்களில் தகுதியான பெண்கள் இல்லையா? ஏன் அவர்களை உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமனம் செய்வதில்லை?

மேலும் உச்சநீதிமன்ற நீதிபதிகளில் 34 சதவீதம் பிராமண சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவும், நாடு முழுவதும் மாநில உயர்நீதிமன்றத்தில் (சென்னை, கொல்கத்தா, திருவனந்தபுரம்) உள்ளிட்டவற்றில் 79 சதவீதம் பிராமணர்களாக இருக்கிறார்கள். ஆனால் மற்ற சமுதாயத்தினர், பட்டியலின, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் சாதியினருக்கு நீதிபதிகள் நியமனத்தில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். ஆனால் அவ்வாறு வழங்காமல் குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கே வழங்குகிறார்கள்.

கொலிஜியம் பரிந்துரைத்த பெயரை ஒன்றிய அரசு ஏற்று கொள்ள வேண்டும். இரண்டு முறை கொலிஜியம் பரிந்துரைத்த ஜான் சத்தியன் பெயரை, உச்சநீதிமன்றத்திற்கு ஒன்றிய அரசு ஏற்று கொள்ளவில்லை. ஒன்றிய அரசுக்கு வேண்டாதவர்களை பரிந்துரை செய்வதில்லை. இந்திய மக்கள் தொகையில் 10 சதவீதம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. நீதிபதிகள் நியமனத்தில் இருக்கும் குழப்பங்களை விடுத்து முறையாக நியமனம் நடக்க வேண்டும். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சரும் குரல் எழுப்ப வேண்டும்.

75 ஆண்டுகளில் மக்கள் தொகையில் அதிகமாக உள்ள மக்களின் பிரதிநிதிகள் பட்டியலின, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் இல்லை. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நியமனம் கூட ஒன்றிய அரசு கையில் எடுக்கிறது. இதில் 2014 பிறகு மோசமான நிலை வந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சித்தாந்தம் (ஆர்எஸ்எஸ் சித்தாந்தம்) உள்ளவர்கள் மட்டுமே நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர். 2025ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் 25-30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதில் பட்டியலின, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களில் பணி நியமனம் வழங்க வேண்டும்.

கொலிஜியத்தினர் தங்கள் கடமையை ஒழுங்காக செய்யவில்லை. நீதித்துறையையும் ஒன்றிய அரசு கையில் எடுக்கிறது. கொலிஜியம் பரிந்துரைத்த பெயர்களையும் நீதிபதிகளாக வர விடாமல் தடுக்கிறார்கள். இந்த ஆண்டு 25 முதல் 30 நியமனங்கள் நடைபெறும் போது அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்கள் இடம்பெற வேண்டும். சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும். தற்போது நீதிபதிகள் அதிகமாக உள்ள சமூகத்திற்கு மேலும் நியமனங்கள் செய்ய கூடாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நீதிபதிகள் நியமனத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினரே அதிகம் உள்ளனர்: ஓய்வு பெற்ற நீதிபதிகள் சந்துரு, ஹரி பரந்தாமன் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: