உ.பி. கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். நடைமேடை 13,14,15 -ல் நின்றிருந்த உ.பி செல்லும் ரயில்களில் ஏற பயணிகள் முண்டியடித்ததால் பயங்கர கூட்டம் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இரவு 10 மணியளவில் இந்த நெரிசல் ஏற்பட்டுள்ளது. 100-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த 13ம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மிகப்பெரிய ஆன்மிக நிகழ்வில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் நாள்தோறும் வருகின்றனர். இதுவரை 50 கோடிக்கும் மேற்பட்டோர் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.

இந்த நிலையில், இன்று விடுமுறை என்பதால் பிரயாக்ராஜ் செல்ல ஏராளாமானோர் டெல்லி ரயில் நிலையம் வந்துள்ளனர். இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்துள்ளதனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனை அடுத்து ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
டெல்லி ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல் காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. டெல்லியில் இருந்து கும்பமேளாவுக்கு செல்ல 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து டெல்லி ரயில்நிலையத்தில் கூட்டம் குறைந்துள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்தது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

டெல்லி ரயில் நிலைய கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்

The post உ.பி. கும்பமேளாவுக்கு செல்வதற்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: