என்எம்எம்எஸ் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை: 8ம் வகுப்பு மாணவர்களுக்கான என்எம்எம்எஸ் தேர்வு வருகிற 22ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஹால்டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.ஒன்றிய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக ஆண்டுதோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும். அதன்படி நடப்பு கல்வியாண்டுக்கான என்எம்எம்எஸ் தேர்வு பிப்ரவரி 22ம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்த தேர்வெழுத விண்ணப்பித்த மாணவர்களின் பெயர்ப் பட்டியலுடன் கூடிய வருகை தாள்கள் மற்றும் ஹால்டிக்கெட்கள் தேர்வுத்துறை இணையதளத்தில் (dge.tn.gov.in) நாளை வெளியிடப்பட உள்ளது.

இவற்றை தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவறாமல் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். இதுதவிர மாணவர்களின் ஹால்டிக்கெட்டில் தலைமை ஆசிரியர்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவர்களுக்கு தேர்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
ஹால்டிக்கெட்களில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையினால் திருத்தி பள்ளி தலைமையாசிரியர் சான்றொப்பமிட வேண்டும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் இருந்து அறிந்து கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post என்எம்எம்எஸ் தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை வெளியீடு: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: