போனுக்கு சார்ஜ் போட்டு விட்டு தூங்கியபோது மின் கசிவால் தீப்பிடித்து வடமாநில தொழிலாளி பலி: உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேருக்கு சிகிச்சை


செங்கல்பட்டு: செல்போன்களை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய நிலையில் மின் கசிவு ஏற்பட்டதில் தீ பற்றி எரிந்ததில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக பலியானார். மேலும், இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்கள் விபின் (32), சர்வன்குமார் (25), சுதீர்வர்ஷன் (27) உள்ளிட்ட மூவரும் செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திராசிட்டி அடுத்த செட்டிபுண்ணியம் பகுதியில் தங்கி கட்டுமான வேலை செய்து வருகின்றனர். இவர்கள் வேலை செய்து வரும் இடத்தின் அருகிலேயே இரும்பு தகரத்தினால் கூரை அமைத்து தனியாக தங்கி வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு இரவு எப்போதும்போல மூவரும் தங்கள் செல்போன்களை சார்ஜ் போட்டு விட்டு தூங்கி விட்டனர்.

இந்நிலையில், அதிகாலை நேரத்தில் மின் கசிவு ஏற்பட்டு அந்த அறையில் இருந்த பொருள்கள் அனைத்தும் தீப்பற்றி எரிய துவங்கியது. எரிவது கூட தெரியாமல் உறங்கியவர்கள், திடீரென விழித்து எழுந்து பார்த்ததும் மூவரும் தீயில் சிக்கியுள்ளது தெரியவந்தது. இந்த தீ விபத்தில் இருந்து பலத்த காயங்களுடன் தப்பிவந்த மூவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, சிகிச்சை பெற்று வந்த மூவரில் சர்வன்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபின் மற்றும் சுதீர்வர்ஷன் ஆகிய இருவரும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போனுக்கு சார்ஜ் போட்டு விட்டு தூங்கியபோது மின் கசிவால் தீப்பிடித்து வடமாநில தொழிலாளி பலி: உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேருக்கு சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: