அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 75 சிசிடிவி கேமரா கண்காணிப்பு பணி: ஆவடி காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்

அம்பத்தூர்: அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் 75 சிசிடிவி கேமரா கண்காணிப்பு பணிகளை ஆவடி காவல் ஆணையர் சங்கர் தொடங்கி வைத்தார். ஆவடி காவல் ஆணையரகம், அம்பத்தூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர் சங்கம் இணைந்து சமூக பங்களிப்பு நிதியின் மூலமாக அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளான அம்பத்தூர் டெலிபோன் எக்சேஞ், அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம், வாவின் சந்திப்பு, வாப்கோ சந்திப்பு என மொத்தம் 22 முக்கிய இடங்கள் மற்றும் சாலை சந்திப்புகளில் 75 கண்காணிப்பு கேமாராக்களை பொருத்தினர். குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காகவும், குற்றச் சம்பவங்களை கண்டுபிடித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டன. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 22 இடங்களில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு பணிகளை ஆவடி காவல் ஆணையர் சங்கர் தொடங்கி வைத்தார்.

பின்னர், பேசிய ஆவடி காவல் ஆணையாளர் சங்கர், சிசிடிவி கேமராக்கள் குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், தடுப்பதற்கும் இந்த கேமராக்கள் பயன்படும். சிசிடிவி கேமராக்கள் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது மட்டுமின்றி, குற்றவாளிகளை பிடிக்கவும் மிகவும் உதவியாக இருக்கிறது. இதனை அமைத்துக் கொடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு காவல்துறை தரப்பில் நன்றி. தொழிற்பேட்டையில் எந்த பிரச்னை என்றாலும் அம்பத்தூர் போலீசார் உடனே நடவடிக்கை எடுத்து வருகின்றனர். திருநங்கைகள் குறித்து வரும் புகார்களுக்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். இந்த நிகழ்ச்சியில் ஆவடி காவல் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி, போக்குவரத்து காவல் துணை ஆணையர் அன்பு, அம்பத்தூர் சரக உதவி ஆணையர் மற்றும் தனியார் நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post அம்பத்தூர் தொழிற்பேட்டையில் 75 சிசிடிவி கேமரா கண்காணிப்பு பணி: ஆவடி காவல் ஆணையர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: