ஓய்வு பெற்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக உயர் நீதிமன்றங்கள் பரிந்துரை செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் பி.ஆர் கவாய், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகள் அடிப்படையில் நியமிக்கலாம் என தெரிவித்துள்ளது. கடந்த 2021 ஏப்ரல் மாதம், அப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வு, 224ஏ விதியின் கீழ் (உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க பயன்படும் சட்டவிதி) உயர் நீதிமன்றங்களுக்கு தற்காலிக நியமிப்பதற்கான வழிமுறைகளை வழங்கி இருந்தது.

கடந்த 2021ல் வழங்கப்பட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட சில நிபந்தனைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மீண்டும் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பான வழக்கை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு, முந்தைய உத்தரவில் குறிப்பிட்ட சில மாற்றங்களோடு புதிய உத்தரவை வழங்கியுள்ளது. அதில், “தற்காலிக நீதிபதிகளாக நியமிக்கப்படும் நீதிபதிகள் டிவிஷன் பெஞ்ச் அமர்வில் அமர்ந்து வழக்குகளை விசாரிப்பார்கள். ஒவ்வொரு உயர் நீதிமன்றமும் இரண்டு முதல் ஐந்து நீதிபதிகள் வரை தற்காலிக நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைக்கலாம்.

மேலும் உயர் நீதிமன்றங்களின் மொத்த நீதிபதிகள் எண்ணிக்கையில் 10 சதவீதத்தை, தற்காலிக நீதிபதிகளின் எண்ணிக்கை மிகாமல் இருக்க வேண்டும். குறிப்பாக 224ஏ விதியை பயன்படுத்தி உயர் நீதிமன்றங்கள் தற்காலிக நீதிபதிகளை நியமிக்கலாம். அதற்கு எந்தவித தடையும் இல்லை. உயர் நீதிமன்றங்களில் தற்போது 62 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் 18 லட்சம் வழக்குகள் கிரிமினல் வழக்குகள் மற்றும், 44 லட்சம் வழக்குகள் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே வழக்குகள் நீண்ட காலம் நிலுவையில் இருப்பதை தவிர்க்கவும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்கும் வகையிலும் 2021 ஏப்ரல் 28ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சில நிபந்தனைகள் தளர்த்தப்படுகிறது. வழக்கமான முறைப்படி உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்க பின்பற்றப்படும் 224-ஏ விதியின் கீழ் குறிப்பிட்ட பரிந்துரைகளையும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் வழங்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.

The post ஓய்வு பெற்ற நீதிபதிகளை தற்காலிக நீதிபதிகளாக உயர் நீதிமன்றங்கள் பரிந்துரை செய்யலாம்: உச்ச நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: