வரத்து குறைவால் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.100க்கு எகிறியது

போரூர்: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவால் தேங்காய் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டிற்கு பொள்ளாச்சி, உடுமலை, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், ஆத்தூர், கடலூர், பண்ருட்டி மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இருந்து தினமும் 30 வாகனங்களில் இருந்து 300 டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இந்நிலையில், நேற்று காலை மார்க்கெட்டுக்கு வெறும் 8 வாகனங்களில் 100 டன் தேங்காய் மட்டுமே வந்ததால் அதன் விலை கிடுகிடுவென அதிகரித்தது.

அதன்படி, ஒரு கிலோ சின்ன தேங்காய் ரூ.10 இருந்து ரூ.50க்கும் பெரிய தேங்காய் ரூ.50 இருந்து ரூ.100க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சென்னை புறநகர் சில்லரை கடைகளில் ஒரு கிலோ சின்ன தேங்காய் ரூ.70க்கும், பெரிய தேங்காய் ரூ.120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து மார்க்கெட் சிறு, மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்.எஸ்.முத்துகுமார் கூறுகையில், வரத்து குறைவால் தேங்காய் விலை உயர்ந்து வருகிறது.

இந்த விலை உயர்வு இன்னும் 6 மாதத்திற்கு நீடிக்கும். விலை குறைய கேரளா, அந்தமான் பகுதியில் இருந்து தேங்காய் இறக்குமதி செய்வதற்கு தமிழக அரசு முடிவெடுத்தால் மீண்டும் தேங்காய் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது என கூறினார். பெண்கள் கூறுகையில், தேங்காய் விலை அதிகரித்துள்ளதால் வீடு, ஓட்டல்களில் தேங்காய் சட்னி நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, தேங்காய் விலையை குறைக்க தமிழக அரசு முயற்சி எடுக்க வேண்டும், என்றனர்.

The post வரத்து குறைவால் தேங்காய் விலை கிடுகிடு உயர்வு: கிலோ ரூ.100க்கு எகிறியது appeared first on Dinakaran.

Related Stories: