எண்ணூர் பர்மா நகரில் உள்ள குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை


திருவொற்றியூர்: திருவொற்றியூர் மண்டலம், 3வது வார்டுக்கு உட்பட்ட எண்ணூர், பர்மா நகரில் ரயில்வே துறைக்கு சொந்தமான மழைநீர் சேமிப்பு குளம் உள்ளது. இங்கு மழை காலத்தில் சுற்றுவட்டாரத்தில் இருந்து வரக்கூடிய மழை நீர் தேங்குவதால் நிலத்தடி நீர் பாதுகாக்கப்படுவதோடு மழைநீரும் சேமிக்கப்படுகிறது. மேலும் எப்போதும் இந்த குளம் வற்றாமல் நீர் தேங்கியிருப்பதால் கால்நடைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில் இந்த குளத்தை ரயில்வே துறை அதிகாரிகள் சரியாக பராமரிக்காததால் ஆகாயத்தாமரை படர்ந்து சேறும், சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசியது. இதனால் மழைநீர் குளத்தில் தேங்க முடியாமல் வீணாகியதோடு சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் திருவொற்றியூரில் உள்ள தனியார் நிறுவனம், இந்த குளத்தை தூர்வாரி சீரமைக்க முன் வந்தது. இதன்படி ஹேன்ட் இன் ஹேன்ட் என்ற தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் இந்த குளத்தை கடந்த சில தினங்களாக 3 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தூர்வாரி ஆழம், அகலப்படுத்தி பாதுகாப்பான கரை அமைத்தது. இதன் மூலம் குளம் தூய்மையாக இருப்பதோடு அழகாகவும் காட்சியளிக்கிறது. இந்நிலையில் மாநகராட்சி பகுதியில் உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான இந்த குளத்தை சென்னை மாநகராட்சி கையகப்படுத்தி இங்கு நடைபாதை, சிறுவர் பூங்கா, இருக்கை, அலங்கார மின்விளக்கு மற்றும் படகு சவாரி போன்றவை அமைத்து சுற்றுலா தலமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post எண்ணூர் பர்மா நகரில் உள்ள குளத்தை சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: