தமிழ்நாடு போன்ற பாதுகாப்பான சூழல் டெல்லியில் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து

சென்னை: தமிழ்நாட்டிற்கு பெண்களை படிக்க அனுப்பும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்வதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேற்று இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உருவான தின விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் வாழும் பிற மாநில விருந்தினர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். பிற மாநிலத்தை சேர்ந்த சாதனையாளர்களுக்கு விருதுகளை வழங்கி, ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு செய்தார்.

பிறகு அவர் கூறியதாவது: காலநிலை, கலாச்சாரம் என பல விதத்தில் மற்ற நாடுகளை விட நமது நாடு வேற்றுமையில் ஒற்றுமையுடன் உள்ளது. ஒரு கலாச்சாரத்தை மாநில வட்டத்தில் கொண்டாடுவதை விட நாடே கொண்டாட வேண்டும். சுதந்திரத்திற்கு பிறகு சாதிய, சமூக ரீதியிலான பிரிவினைவாதம் தற்போதைய மணிப்பூர் கலவரத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

தேர்தல் அரசியல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களில் சாதிய சண்டைகள் அதிகம் நிகழ்கின்றன. இது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.  தமிழ்நாட்டிற்கு பெண்களை படிக்க அனுப்பும் வடகிழக்கு மாநிலத்தை சேர்ந்த பெற்றோர்கள் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர். இதனால் தமிழ்நாட்டிற்கு அதிகமான பெண்கள் படிக்க வருகின்றனர். இதுபோன்ற பாதுகாப்பான சூழல் டெல்லியில் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

The post தமிழ்நாடு போன்ற பாதுகாப்பான சூழல் டெல்லியில் இல்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி கருத்து appeared first on Dinakaran.

Related Stories: