×

சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக டோனியை நியமிக்க திட்டம்: பிசிசிஐ பேச்சுவார்த்தை

மும்பை: ஐசிசி சாம்பியன் டிராபி தொடர் 8 ஆண்டுகளுக்கு பின் வரும் பிப். 19ம் தேதி முதல் மார்ச் 9ம் தேதி வரை பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் தலா 4 அணிகள் என பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடக்கிறது. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடம் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

பாகிஸ்தானின் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய மைதானத்தில் போட்டிகள் நடக்கிறது. இந்திய அணி பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்ல மறுத்துவிட்டது. இதனால் இந்திய அணியின் போட்டிகள் மட்டும் துபாயில் நடக்கிறது. சாம்பியன் டிராபி தொடருக்கு அணிகளை அறிவிக்க வரும் 12ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இந்திய தேர்வு குழுவினர் மும்பையில் கூடி இந்திய அணியை அறிவிக்க உள்ளனர். இதனிடையே கவுதம் கம்பீர் புதிய தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்ற பின்னர் இந்திய அணி சற்று பின்னடைவை சந்தித்து வருகிறது.

இதனால் டோனி மீண்டும் இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் போது ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருக்கும்போது டோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இதேபோல் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக டோனி மீண்டும் ஆலோசகராக பதவி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிசிசிஐ அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

The post சாம்பியன் டிராபி தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக டோனியை நியமிக்க திட்டம்: பிசிசிஐ பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Tags : Tony ,Champions Trophy series ,BCCI ,Mumbai ,ICC Champions Trophy series ,Pakistan ,India ,Australia ,South Africa ,New Zealand ,England ,Afghanistan ,Bangladesh ,Champions Trophy ,Dinakaran ,
× RELATED சாம்பியன்ஸ் கோப்பை தொடர்: இந்திய அணியில் முகம்மது ஷமி?