மும்பை:ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி, முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்தாலும் அடுத்த நான்கு டெஸ்ட் போட்டியிலும் சொதப்பினார். அந்த தொடரில் மொத்தமாகவே அவர் 190 ரன்கள் தான் அடித்தார். இதனால் விராட் கோஹ்லி மீது கடும் எதிர்ப்பு கிளம்பியது. அது மட்டும் இல்லாமல் கோஹ்லி தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிடுதால் கிரிக்கெட்டை மறந்துவிட்டதாக ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பிரபல மாஜி கிரிக்கெட் வீரர் நவஜோத் சிங் சித்து கூறுகையில், “ஒரு வீரர் 2 மாதம் சரியாக விளையாடவில்லை என்றால் அவரை நீங்கள் உறுதியாக நீக்க முடியாது. நாம் செய்த சாதனைகளை வைத்து நாம் அணியில் நீடிக்க முடியாது என்று எனக்குத் தெரியும்.
ஆனால் நீங்கள் கொஞ்சம் அதைப் பற்றி யோசிக்க வேண்டும். பிரபல வீரர் மார்க் டெய்லர் ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து சரியாக விளையாடவில்லை. அசாருதீனும் இப்படி தான் மோசமாக விளையாடினார். ஏன் நமது முன்னாள் கேப்டன் கங்குலியே நான் 8 இன்னிங்ஸில் சொதப்பினாலும், நான் மீண்டும் ஃபார்ம்க்கு வர ஒரு இன்னிங்ஸ் போதும் என்று கூறினார். இதே கோஹ்லி, ரோகித் சர்மா தான் 6 மாதங்களுக்கு முன்பு உங்களுக்கு உலக கோப்பையை வென்று தந்தார்கள். தற்போது ஒரு நாள் கிரிக்கெட் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது. வெறும் 2 வீரர்கள் மீது குறி வைத்துவிட்டு மற்றவர்களை அனைவரும் கவனிக்காமல் விட்டுவிட்டார்கள்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த வீரர் தான் தொடர்ந்து இந்திய அணியில் ரன்கள் குவித்து வருகிறார்கள். குறை கூறுவது என்பது மிகவும் சுலபமான விஷயம். கற்களை எறிவது மிகவும் ஈஸி. ஆனால் ஒரு சிலரே தங்கள் மீது எறியப்படும் கற்களை வைத்து வீடு கட்டுவார்கள். விராட் கோஹ்லிக்கு விமர்சனங்களை எதிர்கொள்வது இது முதல் முறை கிடையாது. ஆனால் சில ரசிகர்கள் விராட் கோஹ்லியின் மனைவியை தேவையில்லாமல் இழுத்து விமர்சனம் செய்கிறார்கள். அது மிகவும் தவறு. நமது ஹீரோக்களை நாம் மதிக்க வேண்டும். பொறுமையாக இருங்கள். அனைவருமே கடின காலத்தை சந்திப்பார்கள். ரோகித் சர்மாவை பொறுத்தவரை அவர் தன்னுடைய உடல் தகுதியை மேம்படுத்த வேண்டும். அவரும் நிச்சயம் ஒரு நல்ல முடிவை கண்டுபிடிப்பார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post கோஹ்லி ரன் குவிக்காததற்கு அவரது மனைவியை குறை கூறாதீர்கள்: மாஜி வீரர் சித்து சாடல் appeared first on Dinakaran.