விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த பழனிவேல் – சிவசங்கரி தம்பதியின் மூன்று வயதுக் குழந்தையான லியா லட்சுமி, எல்.கே.ஜி படித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் இந்த பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறைக்கு இரும்பால் மூடப்பட்ட கழிவுநீர் தொட்டி முழுவதுமாக சேதமடைந்து இருந்துள்ளது.
இந்த சேதமடைந்த கழிவுநீர் பகுதியில், லியா லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் அந்த இரும்புத்தகடு முழுவதுமாக நொறுங்கி விழுந்தது. இதில், லியா லட்சுமி கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்துள்ளார். குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்ட பள்ளி நிர்வாகிகள், உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். இருப்பினும் கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்த லியா லட்சுமி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, குழந்தையின் உடலை அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதன் தொடர்ச்சியாகப் பள்ளியின் தாளாளர் எமில்டா, தலைமை ஆசிரியர் டொமில்லா மேரி மற்றும் வகுப்பு ஆசிரியர் ஏஞ்சல் என 3 பேர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில் இந்த மனுவை நீதிபதி மணிமொழி விசாரித்தார். அரசு தரப்பு மற்றும் தனியார் பள்ளியின் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி 3 பேரின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் கோரி மனு அளித்தனர். அந்த மனு மீது விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று தனியார் பள்ளியில் குழந்தை பலியான சம்பவத்தில் 3 பேருக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. வழக்கில் விசாரணை நடைபெற்று வருவதால் ஜாமீன் வழங்க கூடாது என காவல்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.
மூவரும் சென்னையில் ஒரு வாரம் தங்கி இருந்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட நிபந்தனை விதித்து ஜாமின் வழங்கி நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா உத்தரவு பிறப்பித்துள்ளார். பள்ளி தாளாளர், முதல்வர் ஆகியோர் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க நீதிபதி உத்தரவு அளித்துள்ளார்.
The post விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் குழந்தை பலியான சம்பவத்தில் 3 பேருக்கு ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட் appeared first on Dinakaran.