சிற்பமும் சிறப்பும்
ஆலயம்: திருப்பெருமானாடார்(சிவன்) கோவில், நாங்குப்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு.
ஒரு காலத்தில் பிரமாண்டமாகக் கட்டப்பட்டு, ஏராளமான பக்தர்களால் கொண்டாடப்பட்ட இந்தக் கோயில், தற்போது பார்வையாளர்களின் வருகைக்காகக் காத்திருக்கிறது. விஜயநகரக் கட்டடக் கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயில், தென்னகக் கோயில் கட்டடக்கலையைக் கண்டு ரசித்து, ஆராய விரும்பும் ஒவ்வொரு பாரம்பரிய ஆர்வலரும் கட்டாயம் காண வேண்டிய இடமாகும்.
இந்தக் கோயிலின் ஆரம்பகால கட்டுமானம் முதலாம் பராந்தகன் (907-953) காலத்திலேயே இருந்ததை, அக்காலச் சிற்பங்கள், பராந்தகனுடைய 13ம் ஆட்சியாண்டு கல்வெட்டுச் சான்றுகளின் மூலம் அறியலாம். இறைவன் “திருப்பெருமான்“ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.தற்போது நாம் காணும் அமைப்பு, 16-ஆம் நூற்றாண்டில் விஜயநகர ஆட்சியாளர்களால் முழுமையாக மீண்டும் கட்டப் பட்டது. இப்போது ‘விமானம்’ இல்லாமலும், ‘திருச்சுற்று மாளிகை’ முழுமையடையாத நிலையில் இருந்தாலும், மற்ற கட்டுமானங்களைக் காணுகையில் கோயில் மிகவும் பிரமாண்டமாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்பது கண்கூடு.
அதிஷ்டானம், வேதிகை, எட்டு முகம் கொண்ட விஷ்ணுகாந்தத் தூண்கள், பதினாறு முகம்கொண்ட சந்திரகாந்தத் தூண்கள், அந்தராளம், அர்த்த மண்டபம், திருச்சுற்று மாளிகை, கலைநயத்துடன் கூடிய லதா கும்பம் போன்ற பல்வேறு கட்டடக்கலைக் கூறுகள், நுழைவாயிலில் மேற்குப் பகுதியில் விநாயகர், லட்சுமி மற்றும் சரஸ்வதியுடன் கூடிய ‘மகர தோரணம்’, எழில் மிகுந்த ‘மகர பிரணாளம்’ ஆகியவை ஒவ்வொரு பார்வையாளரையும் கவர்ந்திழுக்கும்.
The post பிரமிக்க வைக்கும் திருப்பெருமானாடார் கோயில் appeared first on Dinakaran.