தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 6 திங்கட்கிழமை தொடங்கியது. ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வெளியேறியது, அதன் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு படித்தது என பரபரப்பாக தொடங்கிய பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் இரங்கல் குறிப்புடன் ஒத்திவைக்கப்பட்டது. இதில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மறைந்த சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழி ராஜதத்தன், மறைந்த ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
மூன்றாம் நாளான நேற்று அண்ணாப் பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டு விவாதிக்கப்பட்டது. அதில், சம்பந்தப்பட்டவர் மீது கடுமையான நடவடிக்கை, பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய நிவாரணம், யார் அந்த சார்? என்பதை கண்டுபிடிப்பது என பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று 4 வது நாளாக தொடங்கிய சட்டப்பேரவையில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர் பின்னர் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. சட்ட மசோதாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
அந்த மசோதாவில் 12 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு 10 ஆண்டுகள் குறையாத சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பாலியல் வன்கொடுமை வழக்கில் குறைந்தபட்சம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது.
காவல்துறை ஊழியர், அவரது உறவினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால் 20 ஆண்டுகள் குறையாத தண்டனை வழங்கப்படும். மீண்டும் மீண்டும் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். 18 வயதுக்குப்பட்ட பெண்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்கப்படும். பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும். பெண்களை பின்தொடர்ந்தால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க சட்டத்திருத்த மசோதா பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.
பேரவைத் தலைவர் அவர்களே, சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தரும் அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு. (மேசையைத் தட்டும் ஒலி) சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வரும் அரசாக நமது அரசு செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை நாம் தினந்தோறும் அறிந்தும், உணர்ந்தும் வருகிறோம்.
இதன்மூலமாக, பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலமாக, தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லும் மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூகப் பங்களிப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வருகிறது.
அதேநேரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர்மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதிலும் உறுதியோடு செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு அரசு. அரசின் இந்த நடவடிக்கைகளைப் பற்றி இந்த மாமன்றத்தில் நான் பலமுறை எடுத்துரைத்துள்ளேன்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டிற்கு மேலான வழக்குகளில் 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த அரசில்தான். பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு பற்றி 2 இலட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியுள்ளதும் இந்த அரசுதான். சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்திருப்பதும் இந்த அரசுதான்.
அனைத்துப் பெண்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபட முனைவோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும். இந்த வகையில், B.N.S. சட்டத்தின் கீழும், நமது மாநில அரசு சட்டங்களின் கீழும் ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள் வரையறுக்கப்பட்டு இருந்தாலும், இத்தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது.
இந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்குவதற்கு, B.N.S, மற்றும் B.N.S.S. சட்டங்களில் மாநில சட்டத் திருத்தத்திற்கும், ’தமிழ்நாடு 1998-ஆம் ஆண்டு பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத் தடை செய்யும் சட்டத் திருத்தத்திற்கும், சட்டமுன்வடிவுகளை பேரவையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
The post பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை விதிக்க சட்டத்திருத்த மசோதா தாக்கல் appeared first on Dinakaran.