இடையார் கிராமத்தில் நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை

ஜெயங்கொண்டம் ஜன.9: ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் (அட்மா) நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் இடையார் கிராமத்தில் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் ராஜ்கலா கலந்து கொண்டு நிலக்கடலை சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் பருவத்திற்கேற்ற நிலக்கடலை இரகங்கள், விதையளவு, டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்தல், நிலம் தயார் செய்து விதைப்பு மேற்கொள்ளுதல், அடியுரமாக ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இடுதல் ஆகிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார்.

களை நிர்வாகம், நீர் நிர்வாகம், உர நிர்வாகம், நிலக்கடலை பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள், அவற்றைக் கட்டுப்படுத்தும் முறைகள், பின் அறுவடை தொழில் நுட்பங்கள், விற்பனை வாய்ப்புகள், மதிப்புக் கூட்டுதல் ஆகியவை குறித்த தொழில் நுட்பங்கள் பின்வரும் பண்ணைப்பள்ளி வகுப்புகளில் நடத்தப்படும். விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்களை இட்டு சாகுபடி செலவைக் குறைத்து மண்வளத்தைக் காக்க மண் ஆய்வு செய்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கப்பட்டு மண்மாதிரி எடுக்கும் முறை செயல் விளக்கம் செய்து காட்டப்பட்டது.

முன்னதாக வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்தும் உழவன் செயலியை பயன்படுத்தி இடுபொருட்கள் முன்பதிவு செய்யும் முறைகள் குறித்தும் விளக்கினார். கிராமத்தின் கலைஞர் திட்ட பொறுப்பு அலுவலர் மகேஸ்வரி கலந்து கொண்டு கலைஞர் திட்டம் மற்றும் தோட்டக்கலைத்துறை செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து விளக்கினார். உதவி தொழில் நுட்ப மேலாளர் ஆரோக்கியராஜ், மகேஷ்குமார் நன்றி கூறினார். இடையார் கிராமத்தைச் சேர்ந்த நிலக்கடலை சாகுபடி செய்து வரும் 25 விவசாயிகள் மற்றும் பண்ணை மகளிர் கலந்துகொண்டனர்.

The post இடையார் கிராமத்தில் நிலக்கடலை சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை appeared first on Dinakaran.

Related Stories: