திருமணமானதை மறைத்து காதலன் ஏமாற்றியதால் இன்ஜினியர் தீக்குளித்து தற்கொலை: கார் வாங்க ரூ.1.80 லட்சம் பெற்றதும் அம்பலம்

சென்னை: மேற்கு மாம்பலம் சீனிவாச பிள்ளை தெருவை சேர்ந்தவர் விஜயா (24). மென்பொருள் இன்ஜினியர். போரூரில் உள்ள பிரபல தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த 2 ஆண்டுகளாக பிரகாஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களாக விஜயா போன் செய்தாலும், காதலன் பிரகாஷ் எடுக்காமல் இருந்துள்ளார். கடந்த 31ம் தேதி நள்ளிரவு புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க காதலனுக்கு விஜயா போன் செய்துள்ளார். அப்போது பிரகாஷ் ‘தனக்கு திருமணம் ஆகிவிட்டது.

எனக்கு கால் பண்ணாதே’ என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டுள்ளார். இதனால், மனமுடைந்த விஜயா, மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். விஜயா உயிரிழப்பதற்கு முன்பு சைதாப்பேட்டை 17வது நடுவர் மருத்துவமனையில் விஜயாவிடம் மரண வாக்குமூலம் பெற்றுள்ளார்.

அதில் காதலன் பிரகாஷ் திருமணம் ஆனதை மறித்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், கார் வாங்க ரூ.1 லட்சமும், நகை வாங்க ரூ.80 ஆயிரம் என மொத்தம் ரூ.1.80 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியதாகவும் மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அதனை தொடர்ந்து அசோக் நகர் போலீசார் காதலன் பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் மேற்கு மாம்பலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post திருமணமானதை மறைத்து காதலன் ஏமாற்றியதால் இன்ஜினியர் தீக்குளித்து தற்கொலை: கார் வாங்க ரூ.1.80 லட்சம் பெற்றதும் அம்பலம் appeared first on Dinakaran.

Related Stories: