வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை(10ம் தேதி) துவங்கி 19ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்து இருக்கும். ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்து ஏழுமலையான வழிபட இலவச தரிசன டோக்கன்களை வழங்க திருப்பதியில் 8 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் தேவஸ்தான நிர்வாகம் 94 கவுண்டர்களை அமைத்துள்ளது. அந்த கவுன்டர்களில் இன்று அதிகாலை 5 மணி முதல் இம்மாதம் 10, 11, 12 ஆகிய நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவித்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை வழங்கப்பட இருக்கும் டோக்கன்களை வாங்க நேற்று மதியம் முதலே கவுன்டர்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் டோக்கன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேரம் கடந்து செல்ல செல்ல முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நுழைய முயன்றதால் கவுன்டர்கள் முன்பு கடும் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ள போலீசார் அவர்களை கட்டுப்படுத்துவதில் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்த நிலையில் பலர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். இதில், சேலத்தை சேர்ந்த மல்லிகா (40) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் திருப்பதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 5 பேர் இறந்தனர். உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி, ஆத்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
“திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உட்பட அப்பாவி மக்கள் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய விழைகிறேன்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
The post திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 6 பேரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.