ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களுக்கான நிதியை நிலுவை வைத்துள்ளதால் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க முடியவில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்

சென்னை : ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களுக்கான நிதியை நிலுவை வைத்துள்ளதால் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க முடியவில்லை என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில், சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். இதனிடையே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ரூ.1000 பணம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது வழங்கப்படவில்லை.
இந்நிலையில், இ.கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் மாரிமுத்து, பொங்கல் பரிசுடன் ரூ.1000 குறித்து எழுப்பிய கேள்விக்கு, தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அதற்கான பதில் அளித்தார். அதில்,”வெள்ள நிவாரணப் பணிகளுக்கு ரூ. 37,000 கோடி கேட்ட நிலையில், ஒன்றிய அரசு ரூ. 276 கோடியே வழங்கியது. தமிழ்நாடு அரசு ரூ.2700 கோடி வரை புயல் பாதிப்பு பணிகளுக்காக செலவு செய்துள்ளது. SSA திட்டத்தில் ரூ. 2,100 கோடியை ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இதனால், அந்த செலவுகள் மாநில நிதியில் இருந்தே மேற்கொள்ளப்படுகின்றன. 2024ல் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியே, பொங்கல் பரிசு தொகை ரத்தானதற்கு காரணம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல், அதிமுக ஆட்சியில் பொங்கலுக்கு ரூ. 2500 வழங்கப்பட்டதாக அக்கட்சி எம்.எல்.ஏ. கோவிந்தராஜ் கூறியதற்கு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அளித்த பதிலில், “2017, 2018 ஆண்டுகளில் பொங்கல் தொகுப்பில் ஒரு பைசா கூட நீங்கள் கொடுக்கவில்லை. 2021ல் தேர்தலுக்காக ரூ.2500 கொடுத்தீர்கள். கொரோனா காலத்தில் நாங்கள் ரூ.5000 வழங்கக் கோரினோம். நீங்கள் ரூ.1000 நிவாரணம் கொடுத்தீர்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்து ரூ.4000 கொடுத்தோம்” இவ்வாறு தெரிவித்தார்.

The post ஒன்றிய அரசு பல்வேறு திட்டங்களுக்கான நிதியை நிலுவை வைத்துள்ளதால் பொங்கல் பரிசு ரூ.1000 வழங்க முடியவில்லை : அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் appeared first on Dinakaran.

Related Stories: