சட்டப்பேரவையில் திமுக-அதிமுக காரசார விவாதம் கவர்னரை உரையாற்ற விடாமல் செய்தது அதிமுக உறுப்பினர்கள் தான்: முதல்வர் கேட்டுக்கொண்டதால் அதிமுக உறுப்பினர்கள் மீதான அவை உரிமை குழு விசாரணை ரத்து

தமிழக சட்டப்பேரவையில் நேற்று சபாநாயகர் அப்பாவு பேசியதாவது: கடந்த 6ம் தேதி கவர்னர் உரை நிகழ்த்தவந்தபோது அவரை பேச விடாமல் தடுத்தது அதிமுக உறுப்பினர்கள்தான். அவரை பேசவிடாமல் கவர்னரை மறித்தது நீங்கள் (அதிமுக) தான். அவரை பேசவிடாமல் நெருக்கடி கொடுத்ததால் அவையிலிருந்து உங்களை வெளியேற்றினோம். இவ்வாறு அவர் பேசினார்.
(இந்த நேரத்தில் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அவையில் கூச்சல் – குழப்பம் நிலவியது)
அவை முன்னவர் துரைமுருகன்: அவை நடவடிக்கை கெட்டுப்போச்சு. அனைவரும் அமருங்கள்.(இவ்வாறு துரைமுருகன் கோபமாக பேசியதும் அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்தனர்.)
எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்: கடந்த 6ம்தேதி கவர்னர் உரை நிகழ்த்த வந்தபோது காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்தான் முதலில் அவரது முன்னால் போய் நின்றார்கள். நாங்கள் அரசின் கவனத்தை ஈர்க்கத்தான் சபையில் கொண்டு வந்தோம். நீங்கள் திட்டமிட்டு இந்தக் குற்றச்சாட்டு சொன்னதை வாபஸ் வாங்க வேண்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: எந்தக் காரணத்தைக் கொண்டும் நீங்கள் வாபஸ் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. முன்கூட்டியே உங்களுக்குத் தெரியும் கவர்னர் உரை என்று. கவர்னர் உரை நடைபெறும்போது நீங்கள் பதாகைகளோடு வந்தது தவறு. சபைக்கு பதாகைகளோடு வந்தது தவறு என்று சொல்லி எங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். அவை உரிமைக் குழுவுக்கு அனுப்பியும் எங்கள் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள். நான் சபாநாயகரை கேட்டுக்கொள்ள விரும்புவது, பதாகைகளோடு வந்த உறுப்பினர்கள் மீது நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள் என்பதுதான் என்னுடைய கேள்வி.
சபாநாயகர் அப்பாவு: கவர்னர் உரை நிகழ்த்தும்போது இடையூறு கூடாது என்று பேரவை விதியிலேயே உள்ளது. ஆனால், அவர் உரையாற்றும் போது ஏன் பாதகை காட்டினீர்கள். (இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் பேச முயன்றார்).
அவை முன்னவர் துரைமுருகன்: பொதுவாக கவர்னர் உரையின்போது யாராவது குறுக்கிட்டால் நடவடிக்கை எடுக்கலாம் என முன்னாள் சபாநாயகர் தனபால் கூறியிருக்கிறார். பதாகை கொண்டு வந்தது தவறு. உங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், எடுக்கவில்லை. அதற்காக அவருக்கு நன்றி கூறுங்கள்.
சபாநாயகர் அப்பாவு: கவர்னர் உரையின்போது இடையூறு கூடாது என்று பேரவை விதி எண் 17-ல் கூறப்பட்டுள்ளது. கடந்த 6ம்தேதியே நீங்கள் இவ்வாறு நடந்து கொண்டபோது, நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினேன். பல கட்சி உறுப்பினர்களும் என்னிடம் வந்து வலியுறுத்தினார்கள் அன்றைக்கு அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்க வேண்டுமென்றே, விதிகளுக்கு மாறாக, மரபுகளைப் பின்பற்றாமல் குழப்பம் விளைவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்பதில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து உள்ளதாலும், வருங்காலங்களில் இந்த நிகழ்வு என்பது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடக்கூடாது என்பதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆகவே, கடந்த 6ம்தேதி பேரவையில் நடைபெற்ற இந்நிகழ்வினை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது இது அவை உரிமை மீரிய செயல். எனவே இதுகுறித்து விசாரித்து, ஆய்ந்து அறிக்கை அளிப்பதற்காக பேரவை விதி 226-ன்கீழ் அவை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைக்கிறேன்.
(இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்).
முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீங்கள் (சபாநாயகர்) ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறீர்கள். அதில் குறுக்கிட நான் விரும்பவில்லை. எனினும், என்னுடைய வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக்கொண்டு, இனி வரக்கூடிய காலகட்டங்களில் இதுபோன்ற தவறுகள் நிச்சயமாக நடைபெறாது என்ற உறுதியை அவர்கள் வழங்குவார்கள் என்று சொன்னால், இத்தோடு இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று நான் கேட்டுக் கொள்கிறேன்.
(இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதும், சபாநாயகர் அப்பாவு, அதிமுக உறுப்பினர்கள் மீதான அவை உரிமை குழு விசாரணையை ரத்து செய்தார்).
எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார்: ஜனநாயக முறைப்படி மக்கள் பிரச்சினைக்காகத்தான் அதிமுக என்றைக்கும் போராடும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

The post சட்டப்பேரவையில் திமுக-அதிமுக காரசார விவாதம் கவர்னரை உரையாற்ற விடாமல் செய்தது அதிமுக உறுப்பினர்கள் தான்: முதல்வர் கேட்டுக்கொண்டதால் அதிமுக உறுப்பினர்கள் மீதான அவை உரிமை குழு விசாரணை ரத்து appeared first on Dinakaran.

Related Stories: