சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை: துணைவேந்தர் தேடுதல் குழுவில், மாநில அரசின் சார்பில் பிரதிநிதி இடம்பெற வேண்டும் என்று தற்போதுள்ள விதிமுறை நீக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் பொறுப்புக்கு கல்வியாளர் அல்லாதவர்களையும், தனியார் துறையில் பணியாற்றியவர்களையும் நியமனம் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. தற்போதைய விதிமுறைகளின்படி, உதவிப் பேராசிரியர் மட்டத்தில்-நுழைவு நிலைப் பதவிக்கு நியமனம் கோரும் விண்ணப்பதாரர் யுஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகளை எல்லாம் நீக்கிவிட்டு இந்துத்துவ செயல்திட்டங்களுக்கு ஆதரவானவர்களை துணைவேந்தர்களாக நியமனம் செய்வதற்கு யுஜிசி முயற்சிப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். பல்கலைகளை, கல்லூரிகளை நிர்வகிக்கும் பொறுப்பும் கடமையும் மாநில அரசுகளுக்குத்தான் முழுமையானதாக இருக்கிறது. இந்நிலையில் யுஜிசி தன்னாட்சி அமைப்பை பயன்படுத்தி மாநிலங்களின் உரிமைகளை நசுக்குவதை ஏற்க முடியாது. ஒன்றிய அரசு உடனடியாக யுஜிசி விதிமுறைகள் திருத்த வரைவு அறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
The post யுஜிசி விதிமுறைகளை மாற்றி மாநில உரிமையை பறிப்பதா? வைகோ கண்டனம் appeared first on Dinakaran.