* தேசிய நெடுஞ்சாலை 7 மணி நேரம் ஸ்தம்பிப்பு, கடைகள் அடைப்பு, மதுரை நகரமே குலுங்கியது
மதுரை: டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு அனுமதி கொடுத்த ஒன்றிய அரசை கண்டித்து மேலூரிலிருந்து மதுரைக்கு சுமார் 50 ஆயிரம் பேர் நடைபயணமாகவும், வாகன பேரணியாகவும் வந்தனர். 20 கிமீ தூரத்திற்கு 7 மணி நேரம் நடந்த இப்போராட்டத்தால் மதுரையே ஸ்தம்பித்தது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, அ.வல்லாளபட்டி, நாயக்கர்பட்டி, கம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க வேதாந்தாவின் துணை நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு மேலூர் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு, சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி, ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தது. மேலும், நான் முதல்வராக இருக்கும்வரை டங்ஸ்டன் திட்டத்துக்கு அனுமதி தர மாட்டேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதையடுத்து, அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும், சம்பந்தப்பட்ட பகுதி தவிர்த்து மாற்றுப்பகுதிகளில் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் சமீபத்தில் ஒன்றிய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது.
ஒன்றிய அரசின் இந்த அறிவிப்பை மேலூர் சுற்றுவட்டார பகுதியினர் ஏற்கவில்லை. இப்பகுதியினரின் வாழ்வாதாரத்தை அழிக்கும் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி ஜன. 7ல் பெரியாறு ஒருபோக பாசன விவசாய சங்கம் சார்பில் மதுரைக்கு நடைபயண போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு சங்கங்கள், அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர்.
தொடர் போராட்டம்: மேலூர் – மதுரை இடையே மேலூர் நகர், வெள்ளலூர், கருங்காலக்குடி, கீழவளவு, கொட்டாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரத்திற்கும் அதிகமான கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. இதனால், கடைத்தெருக்கள் வெறிச்சோடின. இதைத்தொடர்ந்து மதுரை – திருச்சி நான்கு வழிச்சாலையில் மேலூர் அருகே நரசிங்கம்பட்டியில் இருந்து மதுரை தல்லாகுளம் தபால்தந்தி அலுவலகத்தை நோக்கி விவசாயிகள் நேற்று காலை நடைபயணத்தை துவக்கினர். இதில், 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் என சுமார் 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
நடைபயண வழியெங்கும் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர். மதுரை எஸ்பி அரவிந்த், தேனி மாவட்ட எஸ்பி சிவபிரசாத் தலைமையில் சாலையோரத்தில் 2 ஆயிரம் போலீசார் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. வாகனங்களிலும் படையெடுப்பு: நடைபயணமாக வந்தவர்களை மேலூர் வெள்ளரிப்பட்டி அருகேயும், சிட்டம்பட்டி டோல்கேட் பகுதியிலும் தடுத்த போலீசார், போக்குவரத்து பாதிக்கும் என்பதால் வாகனங்களில் செல்லலாம் என அறிவுறுத்தினர். ஆனால், விவசாயிகள் இதை ஏற்க மறுத்து, தங்களது நடைபயணத்தை தொடர்ந்தனர்.
பல்லாயிரம் பேர் நடைபயணமாக சென்ற நிலையில், ஏராளமானோர் டிராக்டர், லோடு வாகனங்கள், கார்கள் மற்றும் டூவீலர்களிலும் தொடர்ந்தனர். ஒன்றிய அரசை கண்டித்து கோஷம்: டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தியும், ஒன்றிய அரசை கண்டித்தும் கைகளில் பதாகைகளுடனும், கோஷங்கள் எழுப்பியவாறும் வந்தனர். விவசாயிகள் அமைப்பு போராட்டம் அறிவித்திருந்தபோதும், இதில் கிராமம் கிராமமாக அனைத்து அரசியல் கட்சியினர், மேலூர் அனைத்து வர்த்தக சங்கத்தினர், வழக்கறிஞர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
மதுரை ஒத்தக்கடை வரையிலும் மாவட்ட போலீஸ் பாதுகாப்பிலும், அங்கிருந்து போலீஸ் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர்கள் வனிதா, ராஜேஸ்வரி, அனிதா தலைமையிலும் நகர்ப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். நேற்று காலை 9 மணிக்கு துவங்கிய நடைபயணம் ஒத்தக்கடை, உத்தங்குடி, மாவட்ட நீதிமன்றம் வழியாக மதுரை நகரை பிற்பகல் 2.30 மணியளவில் வந்தடைந்தது. திரண்டு வந்த ஒரு பகுதியினரின் வாகனங்கள் சட்டக்கல்லூரி, காந்தி மியூசியம் ரோட்டிலும், மற்றொரு பகுதி பேரணி வாகனங்கள் அவுட்போஸ்ட் ரோட்டிலும் பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.
தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா சம்பவ இடத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டார். காலை 9 மணிக்கு துவங்கிய போராட்டம் மாலை 4 மணி வரை என 7 மணி நேரம் நடந்தது. போலீசார் அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப்பிறகு, முதல்கட்ட போராட்டத்தை முடித்துக் கொண்டு கலைந்து செல்வதாக போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் அறிவித்தனர். இதனால் சுமார் 7 மணி நேரம் திருச்சி – மதுரை சாலைப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
* வழி நெடுக உதவி
விவசாயிகள், பொதுமக்கள் நடைபயணமாக வந்தபோது, வழியெங்கும் தன்னெழுச்சியாக கிராமத்தினர் போராட்டத்தில் பங்கெடுத்தவர்களுக்கு தண்ணீர் பாட்டில்கள், உணவுப்பொட்டலங்கள், மோர் உள்ளிட்டவை வழங்கி ஆதரவு கொடுத்தனர்.
* ஜன.26ல் வீடுகளில் கருப்புக்கொடி
டங்ஸ்டன் சுரங்கத்திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டத்தினரிடையே பேசும்போது, ‘‘மேலூரிலிருந்து மதுரை வரை நடந்துள்ள இந்த பிரமாண்ட பேரணியும், டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக கைவிடக்கோரிய போராட்டமும் இந்திய அளவில் போய்ச் சேர்ந்துள்ளது. குறிப்பாக இது கட்டாயம் பிரதமரின் காதுகளை போய்ச் சேரும். ஒன்றிய அரசு இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்து அரசாணை வெளியிட வேண்டும்.
சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுரை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட தமிழ் பண்பாட்டு வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இந்த போராட்டம் இத்துடன் முடியவில்லை. ஒன்றிய அரசு டங்ஸ்டன் திட்டத்தை முழுமையாக ரத்து செய்யாத நிலையில், வரும் ஜனவரி 26ல் மதுரை மாவட்ட கிராமங்களின் வீடுகள்தோறும் கருப்புக்கொடி கட்டி போராட்டங்கள் நடைபெறும். ஒன்றிய அரசுக்கு எதிரான மக்களைத் திரட்டிய போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்’’ என்றனர்.
The post டங்ஸ்டன் சுரங்க திட்டத்துக்கு அனுமதி கொடுத்த ஒன்றிய அரசை கண்டித்து 20 கி.மீ. நடைபயண போராட்டம்: 50,000 பேர் பங்கேற்பு, டிராக்டர், வாகனங்களில் பேரணி appeared first on Dinakaran.