மறைந்த தலைவர்கள் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ்.இளங்கோவன் படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: உலக பொருளாதார மேதை, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் ஆகியோரின் மறைவையொட்டி அவர்களது படத்திறப்பு மற்றும் புகழஞ்சலி கூட்டம் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை வகித்தார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, மன்மோகன் சிங், ஈவிகேஎஸ்.இளங்ேகாவன் ஆகியோரது படங்களை திறந்து வைத்தார். அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அகில இந்திய அளவில் மாபெரும் தூணாக விளங்கி கொண்டிருந்தவர் மன்மோகன் சிங். தமிழக காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய தூணாக விளங்கி கொண்டிருந்தவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன். இரண்டு முக்கிய தலைவர்களை அடுத்தடுத்து நாம் இழந்திருக்கிறோம். இருவருடைய இழப்பும் ஒரு வகையில் பெரிய இழப்பாக அமைந்துள்ளது. நாட்டுக்கு மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, தனிப்பட்ட முறையில் இருவரையும் அறிந்தவன் என்ற அடிப்படையில் எனக்கு இதுவும் ஒரு தனிப்பட்ட இழப்பு தான். மன்மோகன் சிங்கை பொறுத்தவரை அவர் பிறவி அரசியல் வாதி அல்ல. ஆனால் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பாரம்பரியமிக்க அரசியல் குடும்பத்தை சார்ந்தவர்.

தந்தை பெரியார் பேரனாக, ஈவிகேஎஸ் சம்பத் மகனாக இப்படி ஒரு அரசியல் குடும்பத்தில் பிறந்து இறுதிவரை அரசியல் வானில் வலம் வந்தவர். மன்மோகன் சிங் அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராக இடம்பெற்றவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன். இருபெரும் தலைவர்களை நாம் இழந்திருக்கிறோம். மன்மோகன் சிங்ைக பொறுத்தவரை இந்தியர்களை மட்டுமல்லாமல், உலக பொருளாதார மேதைகளில் ஒருவராக அவர் மதிக்கப்பட்டவர். அவர் நினைத்திருந்தால் எந்த கவலையும் இல்லாத பரபரப்பு இல்லாத வாழ்க்கையை அவரால் வாழ்ந்திருக்க முடியும். அவரை போன்ற பொருளாதார நெறியாளர்கள், சிந்தனையாளர்கள் அப்படிப்பட்ட வாழ்க்கையை தான் தேர்ந்தெடுப்பார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக அரசியலில் நுழைந்து நிதியமைச்சராக பொறுப்பேற்றார். அதுவும் மிக நெருக்கடியான நேரத்தில் இந்திய நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்று சரித்திரத்தில் இடம்பெற்றிருக்கிறார். அவர் உருவாக்கி கொடுத்த பொருளாதார திட்டங்கள் தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது. 2004ம் ஆண்டு பிரதமர் நாற்காலி அவரை தேடி வந்தது.

அந்த தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று பிரதமர் பொறுப்பை சோனியா காந்தி தான் ஏற்க வேண்டும் என்று கலைஞர் மட்டுமல்ல, எல்லா தலைவர்களும் சொன்னார்கள். ஆனால் பிரதமர் பதவியை சோனியா காந்தி மறுத்து, மன்மோகன் சிங்கிற்கு கொடுத்தது தான் சோனியா காந்தியின் பெருந்தன்மை. வலிமை வாய்ந்த அரசியல் தலைவராக இல்லாத, ஆக விரும்பாத அதை பற்றி எல்லாம் கவலைப்படாத மன்மோகன் சிங் ஒரு முறை அல்ல, இரண்டு முறை 10 ஆண்டு காலம் பிரதமர் பதவியில் இருந்து நல்லாட்சியை நடத்தி காட்டி இருக்கிறார். அவரது ஆட்சி காலத்தில் தான் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது. அவைகள் எல்லாம் எண்ணில் அடங்காதது. ஒவ்வொன்றும் மகத்தானதாக அமைந்தது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மகளிருக்கு எதிரான வன்செயல்களை தடுக்கும் சட்டம், தகவல் அறியும் உரிமை சட்டம், கல்வி பெறும் உரிமை சட்டம், உணவு பாதுகாப்பு சட்டம், வன உரிமைகள் அங்கீகரிக்கும் சட்டம், நிலம் கையகப்படுத்தப்பட்டால் நியாயமான இழப்பீடுகளை வழங்கும் சட்டம், கையால் மலம் அள்ளுவதை தடை செய்யும் சட்டம், மகளிர் இடஒதுக்கீடு மசோதா அவரது ஆட்சியில் தான் நிறைவேற்றப்பட்டது. ஆதார் அட்டைகள், 3ஜி தொழில் நுட்பம், 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைபேசியில் பேசும் வசதி இப்படி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர் மன்மோகன் சிங்.

10 ஆண்டு கால மன்மோகன் சிங் அமைச்சரவையில் 21 தமிழர்கள் ஒன்றிய அமைச்சர்களாக இடம்பெற்றனர். 8 கேபினட் அமைச்சர்கள், 13 இணை அமைச்சர்கள் என மிக அதிக அளவில் தமிழர்கள் கோலோச்சியது அவரது அமைச்சரவையில் தான். அதுவும் மிக முக்கியமான பல துறைகள் தமிழகத்துக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் எண்ணற்ற பல திட்டங்கள் தமிழகத்துக்கு கிடைத்தது. நமது நூற்றாண்டு கோரிக்கையான தமிழ் செம்மொழி என்பதை அறிவித்த வரலாற்றுக்கு சொந்தகாரர் தான் மன்மோகன் சிங். சென்னையில் செம்மொழி தமிழ் ஆய்வு மத்திய நிறுவனம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், தாம்பரத்தில் புதிய தேசிய சித்தமருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி, திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கடல் சார் தேசிய பல்கலைக்கழகம், 3676 கி.மீட்டர் 4 வழிச்சாலையாக மேம்பாடு, சென்னை துறைமுகம் மதுரவாயல் பறக்கும் சாலை திட்டம், நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம். சென்னை மாநகரில் மெட்ரோ ரயில் திட்டம் இப்படி எண்ணற்ற வளர்ச்சி திட்டங்கள் தமிழகத்துக்கு வர காரணமாக இருந்தவர் தான் மன்மோகன் சிங். கலைஞரிடம் நெருங்கி பழகி நட்போடு அவர் இருந்தது யாராலும் மறுக்க முடியாது. அதனால் இத்தனை திட்டங்களை நாம் தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறோம். பல்வேறு சிறப்பு திட்டங்களை கொண்டு வந்து அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சியை வளப்படுத்தி இருக்கிறோம். தமிழ்நாட்டின் கனவுகளை மதிக்கிறவராக மன்மோகன் சிங் இருந்தார்.

தென்னக மக்களின் குரலின் தேசிய அளவிலான திட்டங்களை கொள்கைகளை எதிரொலிப்பதில் அவர் உறுதி செய்தார். அவரது இழப்பு தமிழ்நாட்டுக்கு மிகப் பெரிய இழப்பு. ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவு என்பது என்னால் தாங்கி கொள்ள முடியாத இழப்பு. என்னை எப்போது சந்தித்தாலும் உங்க உடம்பு எப்படி இருக்கிறது.. என்று தான் கேட்பார். நானும் திருப்பி அவரிடத்தில் அதையே கேட்பேன். உடம்பை பார்த்து கொள்ளுங்கள் என்று தான் சொல்வேன். நீங்கள் எல்லாம் சேர்ந்து என்னை எம்எல்ஏ ஆக்கிவிட்டீர்கள். அந்த நம்பிக்கையை காப்பாத்துவேன் உழைப்பேன் என்று உறுதியாக சொன்னார். ஆனால் உடல் நிலை மோசமாகி மருத்துவமனைக்கு போகும் போது கூட அவரது வீட்டாரிடத்தில் என்னை சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த செய்தி கிடைத்த உடன் மருத்துவமனைக்கு சென்றேன். அவரை நேரில் பார்த்தேன். ஆனால் அவர் பேச முடியாத நிலையில் இருந்தார். ஏதோ சொல்ல முற்பட்டார். ஆனால் அவரால் பேச முடியவில்லை. அதை தான் இன்று நான் எண்ணிப்பார்க்கிறேன். அவரது மகன் திருமகன் ஈவேரா மறைந்த போது வேதனைப்பட்டேன், மனம் உடைந்து போனேன். அவருக்கு நான் ஆறுதல் சொன்னேன். மகன் இறந்ததால் அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அந்த தொகுதியின் உறுப்பினராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

ஆனால் அந்த மகிழ்ச்சியும் நீடிக்காத நிலையில் அவரும் நம்மை விட்டு சென்று விட்டது தாங்கி கொள்ள முடியாத இழப்பு. அவரது தந்தையார் ஈவிகேஎஸ் சம்பத், அண்ணாவுக்கும், கலைஞருக்கும் நெருக்கமான நண்பராக இருந்தார். திமுகவை விட்டு சம்பத் விலகிய பிறகும், அண்ணா அவரை விமர்சிக்கவில்லை. ஆனால் ஈவிகேஎஸ்.இளங்கோவன் அரசியல் சூழ்நிலை காரணமாக கலைஞரை விமர்சிப்பார். ஆனால் கலைஞர் அவரை பற்றி எதுவும் பேசமாட்டார். சம்பத் பையன் தானே பேசட்டும் என்று பெருந்தன்மையாக இருப்பார். மனதில் உள்ளதை மறைக்காமல், அதே நேரம் துணிச்சலாக எதை பற்றியும் கவலைப்படாமல் பேசக்கூடியவர் தான் ஈவிகேஎஸ்.இளங்கோவன். எதிர்த்தாலும் அதை உறுதியாக செய்யக் கூடியவர் அவர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக தேர்வான பிறகு திராவிட மாடல் ஆட்சி சாதனையை மேடையில் தெளிவாக விளக்கி பேசினார். அதை விட, இது தான் உண்மையான காமராஜர் ஆட்சி என்று வெளிப்படையாக சொன்னவர் தான் அவர். எனது புகழஞ்சலியை திமுக சார்பில் தெரிவித்துக் ெகாள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் அஜோய் குமார், சூரஜ் ஹெக்டே, மூத்த தலைவர்கள் ப.சிதம்பரம், கிருஷ்ணசாமி, தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், துணை தலைவர் ஏ.எம்.முனிரத்தினம், அமைச்சர் பொன்முடி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொகிதீன், கொமதேக தலைவர் ஈஸ்வரன்், பொருளாளர் ரூபி மனோகரன், முன்னாள் எம்பி ஜெ.எம்.ஆரூண், விஜய் வசந்த் எம்பி, எம்எல்ஏக்கள் ராமச்சந்திரன், அசன் மவுலானா, மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம், தளபதி பாஸ்கர், எஸ்.ஏ.வாசு, அமைப்பு செயலாளர் ராம் மோகன், முன்னாள் பொருளாளர் பி.ஆர்.ராஜேந்திரன், மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், முத்தழகன், சிவ ராஜசேகரன், டில்லி பாபு, ஓபிசி பிரிவு மாநில துணை தலைவர் எஸ்.தீனா, இலக்கிய அணி தலைவர் புத்தன், எஸ்சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் மா.வே.மலையராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post மறைந்த தலைவர்கள் மன்மோகன் சிங், ஈவிகேஎஸ்.இளங்கோவன் படங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: