பொங்கல் பண்டிகை எதிரொலி; வெண்கல பானைகள் விற்பனைக்கு குவிந்தன: ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள்


நாகர்கோவில்: பொங்கல் பண்டிகையையொட்டி வித, விதமான ரகங்களில் நாகர்கோவிலில் வெண்கல பானைகள் விற்பனைக்கு குவிந்துள்ளன. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. குமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் கிராமங்கள் மற்றும் நகர்ப்புற பகுதிகளில் நடைபெறும். பொங்கல் பண்டிகையையொட்டி தற்போது வீடுகள் நிறுவனங்களில் சுத்தம் செய்யும் பணிகள் நடக்கின்றன. மேலும் பொங்கலையொட்டி புதுமண தம்பதிகளுக்கு சீர் வரிசை பொருட்கள் கொடுப்பதற்காக பல்வேறு வகையிலான பொருட்களையும் பொதுமக்கள் வாங்குகிறார்கள்.

இந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி வெண்கல பானைகள், பித்தளை பானைகள், சில்வர் பானைகளின் விற்பனை சூடுபிடித்துள்ளது. நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பாத்திர கடைகள் உள்ளன. இந்த கடைகளில் வித, விதமான வெண்கல பானைகள், பித்தளை பானைகள், சில்வர் பானைகள் விற்பனைக்காக குவிந்துள்ளன. வெண்கல பானைகள் கிலோ 1300 வரை விற்பனையாகிறது. பானையின் எடையை பொறுத்து விலை மாறுபடும். இந்த பானைகள் கும்பகோணம், தஞ்சாவூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து விற்பனைக்கு வந்துள்ளன. பித்தளை பானைகள் திருநெல்வேலி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக வந்து குவிக்கப்பட்டுள்ளன. செம்பு பானைகள் நாகர்கோவில் வட்டவிளை பகுதியில் செய்யப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

வீடுகளில் வெண்கலம் மற்றும் மண் பானைகளில் பொங்கலிடுவது வழக்கம். கடந்த ஆண்டை விட வெண்கல பானைகள் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறினர். இது குறித்து, பாத்திரக்கடை உரிமையாளர் கூறுகையில், பொங்கல் பண்டிகைக்காக வெண்கல பானைகள், அகப்பைகள், பித்தளைப் பானைகள் ஆகியவற்றை கடந்த மாதமே விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டோம். வெண்கல பானைகள் ஒன்றரை கிலோ எடையில் இருந்து கூட விற்பனைக்காக உள்ளன. வெண்கல அகப்பைகள் ரூ200 முதல் ரூ800 வரை விற்கப்படுகின்றன. பித்தளைப் பாத்திரங்கள் ரூ1,000 முதல் ரூ3,000 வரை என ரகத்துக்கும், தரத்துக்கும் ஏற்றவாறு விலை உள்ளது என்றனர். சீர் வரிசை கொடுப்பதற்காக வெண்கல பானைகளை அதிகமாக மக்கள் வாங்கி செல்கிறார்கள்.

The post பொங்கல் பண்டிகை எதிரொலி; வெண்கல பானைகள் விற்பனைக்கு குவிந்தன: ஆர்வமுடன் வாங்கி செல்லும் பொதுமக்கள் appeared first on Dinakaran.

Related Stories: