கோவில்பட்டி: கோவில்பட்டியில் பொங்கல் பானைகள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஒரு பானை ரூ160 முதல் ரூ250 வரை விற்பனை செய்யப்படுகிறது. தைப்பொங்கல் திருநாளை கொண்டாடிட மக்கள் தயாராகி வருகின்றனர். பொங்கலன்று வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு, பொங்கலிட்டு, மஞ்சள் குலை, பனங்கிழங்கு வைத்து இயற்கைக்கு நன்றி தெரிவித்தும், மறுநாளன்று நிலங்களில் நமக்காக உழைத்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் வகையிலும் மாட்டுப் பொங்கல் வைத்தும் பொங்கல் திருநாளை கொண்டாடி வருகின்றனர்.இந்தாண்டு பொங்கல் பண்டிகை வரும் 14ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு 7 நாட்களே உள்ள நிலையில் வீடுகளுக்கு புதிய வர்ணம் தீட்டியும், அறைகளில் உள்ள தரைத்தளம், வாசல் பகுதியில் மாக்கோலம் போட்டும் அலங்கரித்து வருகின்றனர்.
பொங்கல் பண்டிகையன்று குடும்பத்தினர் அனைவரும் அதிகாலையிலேயே எழுந்து நீராடி புத்தாடை அணிந்து வீடு முன்பு மண் அடுப்பு வைத்து பொங்கல் பானையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்துவது வழக்கம். இதையொட்டி நெல்லை மாவட்டம் பழவூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கோவில்பட்டிக்கு பொங்கல் பானைகள், அடுப்பு, அடுப்புக்கட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இவை கோவில்பட்டி மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை பெண்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இதனால் மெயின் பஜார் கடைகளில் பொங்கல் பானை விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. பொங்கல் பானை ரூ160 முதல் ரூ180 வரையும், கோலம் போட்ட பானைகள் ரூ250க்கும், அடுப்பு கட்டிகள் ரூ60க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
The post கோவில்பட்டியில் பொங்கல் பானைகள் விற்பனை அமோகம்: ரூ160 முதல் ரூ250 வரை விற்பனை appeared first on Dinakaran.