நெல்லை: நெல்லை வண்ணார்பேட்டையில் கனமழையால் பாதிக்கப்பட்ட அண்ணா சாலை, தற்காலிகமாக சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று முதல் பயன்பாட்டுக்கு மீண்டும் திறந்துவிடப்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடந்தாண்டு டிச. 12ம் தேதி அதிகாலை துவங்கி மறுநாள் (13ம் தேதி) அதிகாலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக அம்பை, சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்கள் தண்ணீரில் மிதந்தன. இவ்வாறு மாநகரில் பெய்த பலத்த மழையால் டவுன் காட்சி மண்டபம் சுற்றுவட்டார பகுதிகள், பேட்டை, பாட்டப்பத்து பகுதிகளில் வெள்ளம் தெருக்களை சூழ்ந்தன. இதேபோல் நெல்லை வண்ணார்பேட்டை அண்ணா சாலையில் காணப்படும் பிள்ளையை போட்டு பலாப்பழம் எடுத்த ஓடை பாலத்தில் தண்ணீர் 13ம் ேததி அதிகாலை அதிக அளவில் சென்றது.
இதையடுத்து வாகன போக்குவரத்து அங்கு தடை செய்யப்பட்டு, பாலம் அருகில் யாரும் செல்ல வேண்டாம் என கேட்டு கொள்ளப்பட்ட நிலையில் சாலையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஜேசிபி மூலம் தோண்டி மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார், சாலையை உடைத்து பலாப்பழ ஓடைக்கு தண்ணீர் சீராக செல்ல வழிவகுத்தனர். இதனால் அறிவியல் மையத்தை ஒட்டியுள்ள கொக்கிரகுளம் பகுதி மக்கள் மெயின் ரோட்டை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டனர். அதன்பேரில் நெல்லையில் இருந்து தென்காசி, கடையம் செல்லும் அரசு பஸ்களும், வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலைக்கு சென்று கொக்கிரகுளம் வழியாக கடந்த 3 வாரங்களுக்கு மேலாக சென்று வந்தன.
இவ்வாறு கனமழையால் மாநகராட்சியால் உடைக்கப்பட்ட அண்ணா சாலை பலாப்பழ ஓடை பகுதியில் சிமென்ட் குழாய்கள் பதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த தற்காலிக சீரமைப்பு பணிகள் அனைத்தும் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தன. இதையடுத்து அண்ணா சாலையானது மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று முதல் மீண்டும் திறந்துவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கம்போல் அனைத்து வாகனங்களும் அண்ணா சாலை வழியாக சென்றன.
The post நெல்லை வண்ணார்பேட்டையில் தற்காலிகமாக சீரமைக்கப்பட்ட அண்ணா சாலை மீண்டும் திறப்பு appeared first on Dinakaran.