பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு: 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது

பூந்தமல்லி: ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் நலன் கருதி, கோயம்பேடு மார்க்கெட்டில் 10 நாட்களுக்கு சிறப்பு சந்தை நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோயம்பேடு மார்க்கெட்டில், 3 ஏக்கர் பரப்பளவில் சிறப்பு சந்தை நடத்த அங்காடி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வரும் 9ம் தேதி நள்ளிரவு முதல் தொடங்கி 16ம் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெறும். இதற்கான பணிகளில் அங்காடி நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இந்த சிறப்பு சந்தையில் கரும்பு, வாழைக் கன்று, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து மற்றும் மண்பானை, வாழை இலை உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படும். இதுகுறித்து கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாகி கூறுகையில், ‘கோயம்பேடு மார்க்கெட்டில் வரும் 9ம் தேதி நன்றிரவு முதல் 16ம் தேதி வரை சிறப்பு சந்தையில் மக்கள் சிரமமின்றி பொருட்களை வாங்கிச் செல்லும் வகையில் வழிவகை செய்யப்பட்டு வருகிறது. நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

மேலும், சிறப்பு அதிகாரிகளை நியமித்து கடைகளை ஒழுங்குபடுத்த உத்தரவிடப்பட்டுள்ளது,’’ என்றார். இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘‘பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் என்பதால் கூட்டத்தை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் அதிகரிக்கும். எனவே, மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தின் மீது போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசாரை கூடுதலாக நியமிக்க வேண்டும். மார்க்கெட் பிரதான சாலை வழியாக வெளி மாநில பேருந்துகளை இயக்காமல், மாற்று பாதையில் இயக்க வேண்டும். மெட்ரோ பணிகளால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். சிறப்பு சந்தையில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை அங்காடி நிர்வாகம் செய்து தர வேண்டும்,’’ என்றார்.

* பூக்கள் விலை சரிவு
கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு அனைத்து பூக்களின் விலையும் பல மடங்கு உயர்ந்தது. தற்போது விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் நேற்று அனைத்து பூக்களின் விலையும் குறைந்து காணப்பட்டது. அதன்படி, ஒரு கிலோ மல்லி ரூ.2,000ல் இருந்து ரூ.600க்கும், ஐஸ் மல்லி ரூ.1500ல் இருந்து ரூ.1,200க்கும், மல்லி ரூ.500க்கும், முல்லை ரூ.900க்கும், ஜாதி மல்லி ரூ.600ல் இருந்து ரூ.450க்கும், கனகாம்பரம் ரூ.800ல் இருந்து ரூ.500க்கும், அரளி பூ ரூ.400ல் இருந்து ரூ.100க்கும், சாமந்தி ரூ.120ல் இருந்து ரூ.80க்கும், சம்பங்கி ரூ.120க்கும், பன்னீர் ரோஸ் ரூ.160ல் இருந்து ரூ.140க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.180ல் இருந்து ரூ.160க்கும் விற்பனை செய்யப்பட்டது.

The post பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தைக்கு ஏற்பாடு: 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: