பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. நாட்டிலேயே உத்திரப் பிரதேசம் மாநிலம் முதலிடம்..!!

டெல்லி: குடும்பங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையில் நாட்டிலேயே உத்திரப் பிரதேசம் மாநிலம் முதல் இடத்தில் இருப்பது தேசிய மகளிர் ஆணையம் தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. 2024ல் மட்டும் தமிழ்நாட்டை விட 27 மடங்கு கூடுதலாக உத்திரப் பிரதேசம் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் அரங்கேறியுள்ளது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களில் வரதட்சணை கொடுமை, உறவுகளுக்குள் ஏற்படும் மோதல்கள் போன்ற குடும்ப வன்முறை முக்கிய இடம் வகிக்கிறது. அவ்வாறு பாதிக்கப்படும் பெண்களில் பலர் புகார் கொடுப்பதை தவிர்த்தாலும், சிலர் தைரியமாக புகார் அளிக்க முன்வந்து சட்டத்தின்படி தீர்வை பெறுகின்றனர்.

இதுபோன்ற குடும்ப வன்முறைகளால் பெண்கள் பாதிக்கப்படுவதில் நாட்டிலேயே உத்திரப் பிரதேசம் முன்னிலை வகிப்பதாக தேசிய மகளிர் ஆணையத்தின் தரவுகள் தெரிவிக்கின்றனர். 2024ல் நாடு முழுவது தேசிய மகளிர் ஆணையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 25,743 புகார்கள் பதிவாகியுள்ளன. இதில் 54% அதாவது 13,868 புகார்கள் உத்திரப் பிரதேசத்தில் இருந்து மட்டும் பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்ததாக டெல்லியில் 2,245 புகார்களும், மராட்டியத்தில் 1,317 புகார்களும், பீகாரில் 1,233 புகார்களும் பதிவாகியுள்ளன.

மத்திய பிரதேசத்தில் 1,070 புகார்களும் மற்றும் அரியானாவில் 1,048 புகார்களும், ராஜஸ்தானில் 847 புகார்களும் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் மேற்கு வங்கத்தில் 563 புகார்கள், தமிழ்நாட்டில் 513 புகார்கள், கர்நாடகாவில் 481 புகார்கள் மட்டுமே பதிவாகியுள்ளன. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாடு முழுவதும் அதிகரிப்பதாக புகார்கள் கூறப்பட்டன. 2023ம் ஆண்டில் இருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த புகார்கள் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும், குடும்பங்களில் நடைபெறும் பெண்கள் மீதான வன்முறை குறித்த புகார்கள் குறைய வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. நாட்டிலேயே உத்திரப் பிரதேசம் மாநிலம் முதலிடம்..!! appeared first on Dinakaran.

Related Stories: