ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தீவிர இயற்கை பேரிடராக அறிவிப்பு: அரசிதழில் வெளியீடு

சென்னை: ஃபெஞ்சல் புயல் பாதிப்பை தீவிர இயற்கை பேரிடராக அறிவித்து தமிழக அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. இதன் மூலம், சீரமைப்பு பணிக்கு பேரிடர் நிதியுடன் மற்ற நிதிகளை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி கரையை கடந்தது. இதன் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட வட மாவட்டங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு பெரும் மழைப்பொழிவு ஏற்பட்டது.

இதனால், அப்பகுதி மக்களுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதோடு விளைநிலங்களும் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டன. மேலும், பெரும்பாலான இடங்களில் சாலைகள், பாலங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக்கட்டிடங்கள் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டன. இதனையடுத்து புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொண்டார்.

குறிப்பாக, உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சமும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் நிவாரணமும் தமிழக அரசால் வழங்கப்பட்டன. மேலும், கடுமையான வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் பெஞ்சல் புயலை இயற்கை பேரிடராக அறிவித்து அதற்கான பேரிடர் நிதியை விடுவிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டன.

இருப்பினும், பெஞ்சல் புயல் பாதிப்புகளை பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசு மறுத்துவிட்டது. அதேபோல், தமிழகத்திற்கு உதவும் விதமாக மாநில பேரிடர் நிவாரண நிதிக்கு ரூ.975 கோடி ஒன்றிய அரசு ஒதுக்கியது. இந்தநிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளை தீவிர இயற்கை பேரிடராக தமிழக அரசு அறிவித்து அரசிதழ் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்திற்கு உட்பட்ட பேரிடர் நிதி மட்டுமின்றி இதர நிதிகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தீவிர இயற்கை பேரிடராக அறிவிப்பு: அரசிதழில் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: