ஒப்பந்தக்காரர் வீட்டின் செப்டிக் டேங்கில் பத்திரிகையாளர் சடலம் மீட்பு: சட்டீஸ்கரில் பயங்கரம்

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் ஒப்பந்தக்காரர் வீட்டில் இருந்த செப்டிக் டேங்கில் பத்திரிகையாளர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பகுதிநேர பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் (28) என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முன் திடீரென மாயமானார். அவரது பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் முகேஷ் சந்திரகரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று பீஜப்பூரின் சட்டன்பரா பஸ்தியில் இருக்கும் ஒப்பந்ததாரரின் வீட்டில் இருக்கும் செப்டிக் டேங்க் தொட்டியில் முகேஷ் சந்திரகரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

புதிதாக கட்டப்பட்டிருந்த செப்டிக் டேங்கிற்குள் சடலமாக கிடந்த முகேஷின் சடலத்தை கைப்பற்றிய போலீசார், அந்த சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘கைப்பற்றப்பட்ட முகேஷின் சடலத்தின் தலை மற்றும் முதுகில் காயங்கள் உள்ளன. செப்டிக் டேங்க் தொட்டியில் சடலம் மிதப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முகேஷின் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அணிந்திருந்த ஆடைகளால் உடல் அடையாளம் காணப்பட்டது. இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த முகேஷ், அவரது சகோதரர் யூகேஷ் சந்திரகருடன் ஒன்றாக வசித்து வந்தனர். முகேஷின் மொபைல் சிக்னலை ஆய்வு செய்த போது, கடைசியாக சுரேஷ் சந்திரகர் என்ற ஒப்பந்தக்காரருக்கு சொந்தமான கட்டிடத்திற்கு அருகில் நின்று கொண்டு பேசியுள்ளார். எனவே இந்த கொலையில் ஒப்பந்ததாரருக்கு தொடர்பு இருக்குமோ என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.

கடந்த 2021 ஏப்ரலில் நக்சல்களால் கடத்தப்பட்ட சிஆர்பிஎஃப் கோப்ரா கமாண்டோ ராகேஷ்வர் சிங் மன்ஹாஸை விடுவிப்பதில் முகேஷ் முக்கிய பங்கு வகித்தார். மாநில காவல்துறையும் அவரை பாராட்டியது’ என்றார். இந்தச் சம்பவம் குறித்து சட்டீஸ்கர் முதலமைச்சர் விஷ்ணு தியோ சாய், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததுடன் குற்றவாளிகளை விரைவில் கைது செய்து அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்வோம் என்று கூறியுள்ளார்.

The post ஒப்பந்தக்காரர் வீட்டின் செப்டிக் டேங்கில் பத்திரிகையாளர் சடலம் மீட்பு: சட்டீஸ்கரில் பயங்கரம் appeared first on Dinakaran.

Related Stories: