சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த 8 வீரர்களில் 5 பேர் முன்னாள் நக்சல்கள்: மூத்த போலீஸ் அதிகாரி தகவல்

பீஜப்பூர்: கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த 8 வீரர்களில் 5 பேர் முன்னாள் நக்சல்கள் என்று மூத்த போலீஸ் அதிகாரி தெரிவித்தார். சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் நேற்றுமுன்தினம் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் மாநில காவல் துறையைச் சேர்ந்த கான்ஸ்டபிள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இவர்களது இறுதிச் சடங்கு நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அம்மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் உயிரிழந்த வீரர்களின் சவப்பெட்டியை சுமந்து சென்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக பீஜப்பூர் மாவட்டம் பஸ்தர் டிவிஷனில் குட்ரு-பெட்ரி வழித்தடத்தில் சென்று கொண்டிருந்த காவல் துறை வாகனத்தை குறிவைத்து நக்சலைட்டுகள் கடந்த திங்கள்கிழமை மதியம் 2.30 மணிக்கு கண்ணிவெடி தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 8 வீரர்கள், ஓட்டுனர் ஒருவர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘வரும் 2026ம் ஆண்டுக்குள் நக்சலிசத்தை இந்திய மண்ணிலிருந்து ஒழிப்போம்’ என்று பதிவிட்டார்.

இந்நிலையில் பீஜப்பூர் நக்சல் கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த 8 வீரர்கள் குறித்த பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளது. உயிரிழந்த 8 வீரர்களில் 5 பேர் முன்னாள் நக்சல்கள் என்றும், அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நக்சல் இயக்கத்தில் இருந்து வெளியேறி தேசிய நீரோட்டத்தில் சேர்ந்ததாகவும், அதன்பின் போலீஸ் படையில் சேர்ந்ததாகவும் மூத்த காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘பீஜப்பூர் கண்ணிவெடி தாக்குதலில் உயிர் இழந்த வீரர்களில் தலைமை கான்ஸ்டபிள் புத்ராம் கோர்சா, கான்ஸ்டபிள்கள் தும்மா மார்கம், பண்டாரு ராம், பாமன் சோதி, சோம்து வெட்டி ஆகிய 5 பேரும் முன்னாள் நக்சல்கள் ஆவர். நக்சல் இயக்கத்தில் சேர்ந்தவர்கள் மனம் திரும்பி தேசிய நீரோட்டத்தில் இணைந்து அரசின் பல்வேறு பணிகளில் சேர்ந்து தங்களது வாழ்வை மேம்படுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் ஏழு மாவட்டங்களை உள்ளடக்கிய பஸ்தர் பிரிவில் 792 நக்சல்கள் சரணடைந்தனர்’ என்று கூறினார்.

The post சட்டீஸ்கர் மாநிலத்தில் நடந்த கண்ணிவெடி தாக்குதலில் உயிரிழந்த 8 வீரர்களில் 5 பேர் முன்னாள் நக்சல்கள்: மூத்த போலீஸ் அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: