வங்கி கடனை தள்ளுபடி செய்வதாக ₹2.38 லட்சம் மோசடி: போலி வக்கீல் கைது: கார் பறிமுதல்

தண்டையார்பேட்டை, ஜன.5: வங்கியில் வாங்கிய கடனை லோக் அதாலத் மூலம் தள்ளுபடி செய்து தருவதாக கூறி ₹2.38 லட்சம் வாங்கி மோசடி செய்த போலி வக்கீல் கைது செய்யப்பட்டுள்ளார். மீஞ்சூர் அடுத்த பழவேற்காடு, பிருந்தாவனம் நகரை சேர்ந்தவர் சரவணன் (42). இவர், கடந்த 23ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான், எனது குடும்ப செலவிற்காக நண்பர் பாலாஜி என்பவரின் கிரெடிட் கார்டு மூலம் ₹11 லட்சம் கடன் வாங்கினேன். அந்த பணத்தை திருப்பி செலுத்த முடியாததால், வங்கி நிர்வாகம் என் மீது வழக்கு தொடர்ந்தது. இந்நிலையில், அயனாவரம் சோலையம்மாள் நகரை சேர்ந்த வினோத்குமார் (38) என்பவர், கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் பேஸ்புக் மூலம் எனக்கு அறிமுகமானார். அப்போது, கடன் பிரச்னை தொடர்பாக வினோத்குமாரிடம் கூறினேன். அதற்கு அவர், ‘நான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிகிறேன். நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை, லோக் அதாலத் மூலம் பாதி செலுத்திவிட்டு மீதி பணத்தை தள்ளுபடி செய்துவிடலாம்’ என கூறினார்.

இதற்காக, கூகுள்-பே மூலம் ₹2.38 லட்சத்தை வினோத்குமார் வங்கி கணக்கு அனுப்பினேன். ஆனால் அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரை செல்போனில் தொடர்பு கொண்டால் அவரது 2வது மனைவி நாகலட்சுமி (33) என்பவர் எடுத்து, எனது கணவருக்கு அடிக்கடி போன் செய்து, தொல்லை கொடுத்தால் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறார். எனவே, வினோத்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியிருந்தார். மனுவை பெற்ற ஆய்வாளர் வர்கீஸ் வழக்கு பதிந்து, தலைமறைவான வினோத்குமாரை நேற்று கைது செய்தனர். விசாரணையில், வினோத்குமார், அயனாவரம்-குன்னூர் சாலையில் வழக்கறிஞர் அலுவலகம் நடத்தி வருவதும், பி.எல் படிப்பை முழுமையாக முடிக்காமல், போலி சான்றிதழ் தயாரித்து வக்கீல் என கூறிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமாரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவரிடமிருந்து வக்கீல் கோட், விசிட்டிங் கார்டு, கார் பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவான வினோத்குமாரின் 2வது மனைவி நாகலட்சுமியை போலீசார் தேடி வருகின்றனர்.

The post வங்கி கடனை தள்ளுபடி செய்வதாக ₹2.38 லட்சம் மோசடி: போலி வக்கீல் கைது: கார் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: