சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பை பெற தமிழகம் முழுவதும் வீடு, வீடாக டோக்கன் வழங்கும் பணியை ரேஷன் கடை பணியாளர்கள் நேற்று முதல் தொடங்கி உள்ளனர். இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மட்டுமல்லாமல், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக தமிழக அரசு ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன்மூலம், 2 கோடியே 20 லட்சத்து 94 ஆயிரத்து 585 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதற்கு முன்னதாக, கூட்ட நெரிசலை தவிர்க்க அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த பணிகள் 3ம் தேதி (நேற்று) முதல் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் பரிசு தொகுப்பு விநியோகம் செய்வதற்காக டோக்கன்கள் நேற்று முதல் வழங்கினர். ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன்களை விநியோகம் செய்யும் பணியை தொடங்கினர்.
இந்த டோக்கன்களில் பரிசு தொகுப்பை பெறுவதற்கான நாள், நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதியில் ரேஷன் கடைகளுக்கு சென்று பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், டோக்கன் விநியோகிக்கும் பணி தினமும் காலையில் 100 பேருக்கும், பிற்பகலில் 100 பேருக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு தொகுப்பு வரும் ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை விநியோகம் செய்யப்பட உள்ளது. அதாவது 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை டோக்கன் பெற்றவர்களுக்கும், 13ம் தேதி விடுபட்ட அனைவருக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்பட உள்ளது.
இந்நிலையில், ரேஷன் கடைகளுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்பு பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் ஒருவர் கூட விடுபடாமல் அனைவருக்கும் வழங்க உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவிட்டுள்ளார். மேலும், பொங்கலை முன்னிட்டு தரப்படும் இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் பரிசு தொகுப்புடன் சேர்த்து இதனையும் வழங்க தேவையான அனைத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
The post பொங்கல் பரிசு தொகுப்பு பெற தமிழகம் முழுவதும் டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது: 9ம்தேதி முதல் 13ம் தேதி வரை பொருட்கள் விநியோகம் appeared first on Dinakaran.