×

சிந்துவெளி எழுத்து முறையை கண்டறிந்தால் 8.5 கோடி ரூபாய் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு, தமிழை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது எனவும் பெருமிதம்

சென்னை: சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8.5 கோடி) பரிசாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும், இந்திய துணைக்கண்ட வரலாற்றை தமிழை தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள கலையரங்கில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட உள்ள சர் ஜான் மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், ‘சிந்துவெளி வரிவடிவங்களும்; தமிழ்நாட்டு குறியீடுகளும்’ எனும் ஆய்வு நூலை வெளியிட்டார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 2021ம் ஆண்டு புதிய அரசு அமைந்தவுடன் அதற்கு திராவிட மாடல் அரசு என பெயர் சூட்டினோம்.

இது இரு கட்சியின் அரசு அல்ல; இனத்தின் அரசு என குறிப்பிட்டேன். அதற்கு அடையாளமாக இந்த விழா உள்ளது. இன வரலாற்றை ஆய்வு கண்ணோட்டத்துடன் பார்க்கும் முதிர்ச்சியுடன் அறிவு செயல்பாடாக இந்த கருத்தரங்கம் நடக்கிறது. சிந்துவெளி பண்பாடு நூற்றாண்டு நிறைவு விழாவை கொண்டாடியுள்ளோம். இந்திய துணை கண்ட வரலாற்றில் நமக்கான இடத்தை நிலைநிறுத்துவது தான் நமது நோக்கம்.  அந்தவகையில், வரலாறும் – பண்பாடும்- தொல்லியலும் தொலைநோக்கு பார்வையுடன் ஏற்பாடு செய்துள்ள நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் நிதித்துறை செயலர், தொல்லியல் ஆணையர் உதயச்சந்திரனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவர்கள் இந்த துறைக்கு கிடைத்திருப்பது துறைக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டிற்கே பெருமை கிடைத்திருக்கிறது. சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழாவை கொண்டாட, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையும், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சிந்துவெளி ஆய்வு மையமும் இணைந்து பன்னாட்டு கருத்தரங்கம் ஏற்பாடு செய்திருக்கிறோம். இது நமது அரசின் கடமை. சிந்துவெளி நாகரிகம் முதன்முதலில் 1924ம் ஆண்டு செப்டம்பர் 20ம் தேதி உலகுக்கு அறிவிக்கப்பட்டது. ‘தி இல்லஸ்டிரேட்டட் லண்டன் நியூஸ்’ என்ற இதழில் இந்திய தொல்லியல் துறை டைரக்டர் ஜெனரல் சர் ஜான் மார்ஷல் அதை அறிவித்தார்.

இது இந்திய துணைக்கண்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கி, நம்முடைய கடந்த காலத்தை பற்றிய புரிதலையே மாற்றி அமைத்தது. ஆரியமும் சமஸ்கிருதமும்தான் இந்தியாவின் மூலம் என்று கற்பனையை வரலாறு என்று அதற்கு முன்னர் பலரும் சொல்லிக்கொண்டு வந்தார்கள். அதை மாற்றியது ஜான் மார்ஷலின் ஆய்வுகள்தான். குறிப்பாக, சிந்துவெளி நாகரிகம் ஆரியத்துக்கு முற்பட்டது, அங்கு பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என்று அவர் நூறாண்டுகளுக்கு முன்பு சொன்ன குரல் இன்றைக்கு வலுப்பெற்றிருக்கிறது. சிந்து வெளியில் ‘காளைகள்’தான் இருந்தது.

இது திராவிட சின்னம் சிந்துவெளியில் இருந்து, இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கிறது. மற்றொரு பக்கம் பார்த்தோம் என்றால், குதிரை முத்திரை சிந்துவெளியில் இல்லை. வேத இலக்கியங்களில் பெருநகரங்களும் இல்லை, தாய்த்தெய்வ வழிபாடும் இல்லை. ஆனால், இந்த இரண்டும் சிந்துவெளியிலும் இருக்கிறது. கீழடியிலும் இருக்கிறது. இதையெல்லாம் வைத்துதான் சங்ககாலத் தமிழர்களின் மூதாதையர் இருந்த இடம்தான் சிந்துவெளி என்று நிறுவப்பட்டிருக்கிறது.

சிந்துவெளி பற்றி ஜான் மார்ஷல் தன்னுடைய கண்டுபிடிப்பை வெளியிட்டதும், பெரியார் தன்னுடைய விடுதலை நாளிதழில் அதை பற்றி கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார். பேசியும் இருக்கிறார். பெரியாரை தொடர்ந்து அண்ணாவும் 1948ம் ஆண்டிலேயே சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளங்களை வெளிக்கொணர்ந்த சர் ஜான் மார்ஷல் சாதனைகளை பாராட்டி எழுதியிருக்கிறார். திராவிட மாடல் அரசு சார்பில், இப்போது சிந்துவெளி பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நினைவு பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்துகிறோம்.

ஜான் மார்ஷல் சிலைக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன். கீழடி அருங்காட்சியகம் போலவே, பொருநையிலும் ஒரு அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டு வருகிறது. எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. நம்முடைய அகழாய்வு முடிவுகள் பெரும் உற்சாகத்தைத் தருவதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, மட்பாண்டங்களில் காணப்படும் குறியீடுகளில், சிந்துவெளி எழுத்துக்களின் ஒப்பீட்டளவில் ஒற்றுமைகள் காணப்படுகின்ற இந்த மேடையில் வெளியிடப்பட்ட ஆய்வுநூல் விரிவாக விளக்குகிறது.

இதுதவிர, சிந்துவெளி நாகரிகத்தில், வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்ட முத்திரைகளில் இடம்பெற்றிருக்கும் குறியீடுகளையும், தமிழ்நாட்டில் அகழாய்வுகளில் கிடைக்கும் குறியீடுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது 60 விழுக்காடு குறியீடுகள் ஒரே தன்மையிலான குறியீடுகளாக காணப்படுகிறது. அதேவேளையில், சிந்துவெளியில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும், தமிழ்நாட்டில் பொதுமக்களால் பயன்படுத்தப்பட்ட மட்பாண்டங்களில் பொறிக்கப்பட்டிருக்கும் குறியீடுகளும், அதிகபட்சமாக 90 விழுக்காடு ஒரே தன்மை கொண்டவையாக காணப்படுகிறது என்று தொல்லியல் ஆய்வாளர்கள் இப்போது நிறுவியிருக்கின்றனர்.

இதேபோல், சிந்துவெளியில் கிடைத்த சூதுபவளம், அகேட், நீலப் பளிங்குக் கற்கள் ஆகியவற்றால் செய்யப்பட்ட கல்மணிகள், உயர் வெண்கலப் பொருட்கள் மற்றும் கருப்பு, சிவப்பு மட்கலன்கள், நீத்தாரை புதைக்கும் வழக்கம் போன்ற பண்பாட்டுக் கூறுகளின் எச்சங்கள், தென்னிந்தியாவுக்கும், சிந்துவெளி நாகரிக்கத்துக்கும் இடையேயான பண்பாட்டுத் தொடர்பை, தொடர்ச்சியை உறுதிசெய்கிறது.
இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போன்று, அண்மையில் சிவகளை, ஆதிச்சநல்லூர், மயிலாடும்பாறை, மாங்காடு, தெலுங்கானூர், கீழ்நமண்டி போன்ற இடங்களிடல் கிடைத்த அறிவியல் காலக்கணக்கீடுகள் சிந்துவெளி நாகரிகமும் தமிழ்நாட்டின் இரும்பு காலமும் சமகாலத்தவை என்பதை உறுதிசெய்கிறது என்று அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

அறிஞர் பெருமக்கள் நிறைந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியில் தமிழ் பண்பாட்டை பேணிப் பாதுகாப்பதுதான் தமிழ்நாடு அரசின் தலையாய கடமை என்று உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை மிகுந்த மகிழ்ச்சியுடன் வெளியிட விரும்புகிறேன்.

* செழித்து வளர்ந்த சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் நம்மால் தெளிவாக புரிந்துக்கொள்ள முடியவில்லை. நூறு ஆண்டுகளை கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளி புதிர் பற்றி உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உள்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அந்த முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்புக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.8.5 கோடி) பரிசாக வழங்கப்படும்

* சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில் தலைசிறந்த தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஓர் ஆய்வறிக்கை அமைக்க ரூ.2 கோடி வழங்கப்படும்

* தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி, கல்வெட்டியல் ஆய்வாளர்கள், நாணயவியல் வல்லுநர்கள் ஆகியோரையும் ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். இந்த 3 அறிவிப்புகளும் இந்தத் துறை ஆய்வுகளுக்கு வேகத்தையும், ஊக்கத்தையும் வழங்கும் என்று நம்புகிறேன்.

இந்திய துணைக் கண்டத்தின் வரலாற்றை தமிழை தவிர்த்துவிட்டு இனி எழுதமுடியாது என்று நாம் உரக்க சொல்வோம். அதேபோல், ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பின் நூற்றாண்டில் அவருக்கு நாம் நன்றியை உரித்தாக்கி, அவர் விட்ட பணியை தொடர்வோம்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன், ராஜேந்திரன், சேகர்பாபு, மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

* ஜான் மார்ஷலின் கண்டுபிடிப்பின் நூற்றாண்டில் அவருக்கு நாம் நன்றியை உரித்தாக்கி, அவர் விட்ட பணியை தொடர்வோம்

* சிந்துவெளி பண்பாடு குறித்து ஆராய்ச்சிகளை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையுடன் இணைந்து, ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சி மையம் மேற்கொள்ளும் வகையில் தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வறிக்கை அமைக்க ரூ.2 கோடி வழங்கப்படும்.

* தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையை உலகமே அறிய ஓயாமல் உழைக்கும் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் மட்டுமின்றி, கல்வெட்டியல் ஆய்வாளர்கள், நாணயவியல் வல்லுநர்களை ஊக்கப்படுத்தும்விதமாக, ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்.

The post சிந்துவெளி எழுத்து முறையை கண்டறிந்தால் 8.5 கோடி ரூபாய் பரிசு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு, தமிழை தவிர்த்துவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது எனவும் பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : Principal ,M.U. K. Stalin ,Chennai ,Sindhuveli ,Chief Minister ,K. Stalin ,
× RELATED நாடு முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டு...